குழந்தைகளை சமைத்துச் சாப்பிட்ட ஹமாஸ் பயங்கரவாதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சர்வதேசம் | International

இஸ்ரேல் குழந்தைகளை வெட்டி சமைத்துச் சாப்பிட்ட ஹமாஸ் பயங்கரவாதியின் கைகளை இஸ்ரேல் ராணுவம் வெட்டியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கைகள் இரண்டும் துண்டான நிலையில் உடலில் ஆங்காங்கே கட்டுகள் போட்டபடி உள்ள இளைஞர் ஒருவரின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*ஹமாஸ், காஸா, பாலஸ்தீனத்தின் மேற்குறிப்பிட்ட துருக்கிய பயங்கரவாதியின் பெயர் முகமது மஹ்ரூப்! 7 அக்டோபர் 2023 அன்று இஸ்ரேல் மீதான தீவிரவாத தாக்குதலில் சிறு குழந்தைகளை துண்டு துண்டாக வெட்டி உலைகளில் சமைத்து சமைத்து சாப்பிட்டார்!*

*இஸ்ரேல் அவனைக் கொல்லவில்லை, ஆனால் அவனது இரு கைகளையும் வெட்டி, ஒரு சிறுநீரகத்தை எடுத்து, அவனுடைய குழந்தைப் பேறு கருவிகள் அனைத்தையும் துண்டித்து, அவனை உயிருடன் விட்டுச் சென்றது, மற்ற பயங்கரவாதிகளும், காஸாவின் அனைத்து துருக்கிய மக்களும் அவனிடமிருந்து பாடம் கற்க வேண்டும்!*

*இப்போது உயிர் பிழைத்திருக்கும் இந்த ஜின் தன் வாழ்நாள் முழுவதும் அல்லா ஹு அக்பர் என்று சொல்லி எந்த மனிதனின் கழுத்தையும் வெட்ட முடியாது!*

*நீதி என்ற சொல்லைக் காத்து நீதியை நிலைநாட்ட இது ஒன்றே நியாயமான வழி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதி முகமது மஹ்ரூப் என்பவர் இஸ்ரேல் குழந்தைகளை வெட்டி சமைத்துச் சாப்பிட்டதாகவும், அவரை பிடித்த இஸ்ரேல் ராணுவம் கொலை செய்யாமல் கைகள் மற்றும் சிறுநீரகத்தை அகற்றி அவரை உயிரோடு விட்டுவிட்டதாக பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனுடன் ஒரு மதத்திற்கு எதிராக வன்மத்தை வெளிப்படுத்தும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்து பார்த்தோம்.

இந்த இளைஞரின் புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தில் இருக்கும் நபர் பயங்கரவாதி இல்லை, 15 வயதான தியா அல் அடினி (Diaa Al-Adini) என்பது தெரியவந்தது. இந்த இளைஞர் தொடர்பான செய்தியை reuters.com என்ற சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உடல் உறுப்புக்களை இழந்த ஏராளமானவர்களில் ஒருவர் இவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இஸ்ரேல் குழந்தைகளை கொன்று, சமைத்துச் சாப்பிட்ட இளைஞர் இவர் என்ற தகவல் தவறானது என்பது தெளிவானது. 

உண்மைப் பதிவைக் காண: reuters.com I Archive I theprint.in I Archive

அடுத்ததாக, முகமது மஹ்ரூப் என்று ஹமாஸ் பயங்கரவாதி யாராவது இஸ்ரேலின் தண்டனைக்கு ஆளாகி உள்ளார்களா… உண்மையில் இப்படி யாராவது குழந்தைகளைக் கொன்று சாப்பிட்டார்களா, அவர்களை இஸ்ரேல் ராணுவம் கைகளை வெட்டி, உடல் உறுப்புக்களை அகற்றி தண்டனை கொடுத்ததா, இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று ஆய்வு செய்தோம். ஆனால் நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஏராளமான பாலஸ்தீனிய குழந்தைகளுக்கு கைகள், கால்கள் அகற்றப்பட்டுளள்ளததாக செய்திகள் கிடைத்தன. 

Archive

இஸ்ரேல் தாக்குதலில் கைகளை இழந்த பாலஸ்தீன சிறுவனின் புகைப்படத்தை எடுத்து, குழந்தைகளைக் கொலை செய்து சாப்பிட்டவன் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு கைகளையும் இழந்த சிறுவனின் புகைப்படத்தை, இஸ்ரேலிய குழந்தைகளை கொன்று தின்ற பயங்கரவாதி என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:குழந்தைகளை சமைத்துச் சாப்பிட்ட ஹமாஸ் பயங்கரவாதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian  

Result: False