
இஸ்ரேலின் டெல்அவில் உள்ளிட்ட நகரங்கள் மீது சில மணி நேரங்களில் 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மீண்டும் ஹிஸ்புல்லாஹ் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல். இஸ்ரேலின் நகரங்கள் பற்றி எரிகிறது சில மணிநேரங்களில் 150 ராக்கெட்டுகளை சரமாரியாக தாக்கி #இஸ்ரேலை தாக்கியது. டெல் அவிவ், கலிலீ மற்றும் பல இராணுவ தளங்கள் & நகரங்கள் பற்றி எரிகிறது. பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
17 இஸ்ரேலிய வீரர்களைக் கொன்ற பிறகு இப்போது ஈராக் எதிர்ப்புக் குழு இஸ்ரேலின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையமான பென் குரியன் விமான நிலையத்தில் எங்கள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது மற்றும் TEL AVIV மின் நிலையங்களுக்குள்ளும் தாக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக சில தினங்களுக்கு முன்பு 350க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைச் செலுத்தி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. இதில் சிலர் காயம் அடைந்ததாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேல் நகரங்கள் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ உண்மையா, இப்போது நடந்த தாக்குதலின் வீடியோவா என்று தெரிந்துகொள்ள ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ இந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதத்தில் இருந்து சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி இஸ்ரேல் ராணுவ தளம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதற்கு பிறகே இஸ்ரேலின் பதில் தாக்குதல் தொடங்கியது. அதன் அடிப்படையில் பார்த்தால், ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்குவதற்குப் பல மாதங்களுக்கு முன்பு இந்த வீடியோ வெளியாகி உள்ளது தெரிகிறது.
உண்மைப் பதிவைக் காண: hamal.co.il I Archive
சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தவர்கள் இஸ்ரேலின் தொழிற்சாலைகள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், செய்தி ஊடகங்களில் குறிப்பாக இஸ்ரேலிய செய்தி ஊடகங்களில் லெபனான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஹெப்ரான் (Hebron) என்ற இடத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேலின் ஊடகங்களே இது தீ விபத்து என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன. இதன் அடிப்படையில் இந்த வீடியோ ஹிஸ்புல்லா தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையது இல்லை என்பது தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: israelhayom.co.il I Archive
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா தீவிர தாக்குதல் 2024 அக்டோபரில் தொடங்கியது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2024 பிப்ரவரியில் வெளியாகி உள்ளது. மேலும் இது இஸ்ரேலில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து என்று இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இடம் பெற்ற வீடியோ ஹிஸ்புல்லா தாக்குதல் வீடியோ இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
இஸ்ரேல் நாட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் வீடியோவை எடுத்து ஹிஸ்புல்லா தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேலிய நகரம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:இஸ்ரேல் நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
