நடிகை சரோஜா தேவியின் பேத்திதான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வ செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகை சரோஜாதேவி, நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் ஆகியோரின் படங்களை ஒன்று சேர்த்து, பாட்டி, அம்மா, பேத்தி என்று குறிப்பிட்டு புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், "தமிழ் சினிமாவின் அன்று முதல் இன்று வரை கலக்கி வரும் நடிகை சரோஜாதேவியின் குடும்பம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பழைய நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். மேனகாவின் அம்மாவின் பெயர் சரோஜா. இதை வைத்து பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தான் கீர்த்தி சுரேஷின் பாட்டி என்று இவர்களாக முடிவுக்கு வந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடி எடுத்தோம்.

உண்மைப் பதிவைக் காண: asianetnews.com I Archive 1 I indiatoday.in I Archive 2

கீர்த்தி சுரேஷின் அம்மா மற்றும் அவரது பாட்டியின் பேட்டி ஏதும் யூடியூபில் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா மற்றும் அவரது பாட்டி சேர்ந்து அளித்த பேட்டிகள் நமக்கு கிடைத்தன. அதில், கீர்த்தி சுரேஷ் பற்றி அவரது அம்மாவும், பாட்டியும் பல விஷயங்களை பேசினர். மேலும், தன்னுடைய பாட்டிக்கு நடிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் வற்புறுத்துகிறார் என்று வெளியான செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது.

அதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது பாட்டி சரோஜா இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருந்தது. அந்த சரோஜா பிரபல நடிகை சரோஜா தேவி இல்லை. கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவும் படங்களில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படத்தில் அவர் நடித்ததாக பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பார்த்தோம். அதில், தன்னுடைய குடும்பம் என்று ஒரு புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்திருந்தார். அதில், செய்தி ஊடகங்களில் வெளியான பாட்டியும் இடம் பெற்றிருந்தார். இவை எல்லாம் நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இல்லை என்பதை உறுதி செய்தன. மேலும், கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். சரோஜா தேவியோ கர்நாடகாவைச் சார்ந்தவர்.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

சரோஜா தேவியின் குடும்பம் பற்றி ஆய்வு செய்தோம். அப்போது சரோஜா தேவிக்கு ஒரு மகள் பிறந்தார் என்றும் அவர் இளம் வயதில் இறந்தார் என்றும், அதனால், தன் தங்கையின் மகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்று செய்தி கிடைத்தது. நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை சரோஜா தேவியின் பேத்தி இல்லை என்பதை ஏற்கனவே உறுதி செய்ததால், இது பற்றி விரிவான ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. நமக்கு கிடைத்த ஆதாரங்களே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இடம் பெற்றுள்ள தகவல் உண்மை இல்லை என்பதை உறுதி செய்ய போதுமானதாக இருந்தது.

முடிவு:

நடிகை சரோஜா தேவியின் பேத்திதான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நடிகை சரோஜா தேவியின் பேத்தியா கீர்த்தி சுரேஷ்?

Written By: Chendur Pandian

Result: False