உலகிலேயே அதிக தங்கம் வைத்துள்ள ‘தோண்டுறா’ நாட்டு மன்னர் என்று பரவும் தகவல் உண்மையா?

சமூகம் சார்ந்தவை I Social தமிழகம் | Tamil Nadu

உலகிலேயே அதிக தங்கம் வைத்துள்ளவரும், உலக தங்க மார்க்கெட்டை நிர்வகிக்கும் குழுவில் உள்ளவருமான தோண்டுறா நாட்டு மன்னர் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive

தங்கக் கட்டிகள் நிறைந்த அறையில் ஒருவர் தங்க ஆபரணங்கள் அணிந்து நிற்பது போன்று ஏஐ புகைப்படம் threads.com சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உலகிலேயே அதிக தங்கத்தை தன் வசம் வைத்துள்ளவரும், உலக தங்க மார்க்கெட்டில் அதன் விலையை தீர்மானிக்கும் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தென் மேற்கு ஆப்பிரிக்காவின் அருகிலுள்ள “தோண்டுறா” நாட்டின் மாமன்னர் “மபூங்கா உஃபும் உட்டுங் வூடா”…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகத்திலேயே அதிக அளவு தங்கத்தை வைத்துள்ள நாடு தோண்டுறா என்று குறிப்பிட்டுப் பதிவிடப்பட்டுள்ளது. இப்படி ஒரு நாடு இருப்பதை இதுவரை கேள்விப்பட்டது இல்லை. அதுவும் தங்கத்தை அதிக அளவில் வைத்துள்ள நாடு என்றால் கண்டிப்பாக ஏதாவது செய்தியிலாவது வந்திருக்கும். ஆனால், இதுவரை அப்படிப் படித்தது இல்லை. நையாண்டிக்கு வெளியிட்ட பதிவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பதிவை ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடியபோது நமக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. இப்படி ஒரு நபர் உண்மையில் இருந்திருந்தால் நிச்சயம் சர்வதேச ஊடகங்களில் அவரைப் பற்றி செய்தி வெளியாகி இருந்திருக்கும். ஆனால், நமக்கு அப்படி எதுவும் இல்லை. சாி தென் மேற்கு ஆப்ரிக்காவில் ‘தோண்டுறா” என்று நாடு ஏதும் உள்ளதா என்றும் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு நாடும் இல்லை என்பது தெரியவந்தது. ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் பட்டியலில் அப்படி ஒரு நாட்டின் பெயரே இல்லை என்பதையும் உறுதி செய்துகொண்டோம்.

அடுத்ததாக இந்த பதிவு தொடர்பாக சமூக ஊடகங்களில் தேடினோம். அப்போது தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சிகள் செய்பவரும், நையாண்டியாக பதிவுகளை வெளியிட்டுவரும் வெங்கடேஷ் ஆறுமுகம் இந்த பதிவை வெளியிட்டிருந்தது தெரியவந்தது. தன்னுடைய படத்தையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தையும் சேர்த்து ஏஐ மூலம் உருவாக்கி அவர் அதை வெளியிட்டிருந்தார். 

Archive

அதில், “உலகிலேயே அதிக தங்கத்தை தன் வசம் வைத்துள்ளவரும், உலக தங்க மார்க்கெட்டில் அதன் விலையை தீர்மானிக்கும் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தென் மேற்கு ஆப்பிரிக்காவின் அருகிலுள்ள “தோண்டுறா” நாட்டின் மாமன்னர் “மபூங்கா உஃபும் உட்டுங் வூடா” அவர்களது அழைப்பின் பெயரில் அவரது தங்க கருவூலத்திற்கே சென்று சந்தித்து (இங்கு இதுவரை டிரம்புக்கு கூட அனுமதி தரவில்லை) தங்கம் விலையேற்ற பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி இருக்கிறேன். பிப்ரவரி 31 அன்று மாமன்னரிடம் இருந்து அறிவிப்பு வரும். தங்கம் கிறாமுக்கு 8 ஆயிரம் குறையும். வெள்ளி கருகும்.. டிஸ்கி : நான் அணிந்திருக்கும் நகைகள் மன்னர் எனக்களித்த பரிசாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

முழுக்க முழுக்க நையாண்டி, நகைச்சுவைக்காக அவர் உருவாக்கிய அந்த பதிவில், இல்லாத பிப்ரவரி 31ம் தேதி என்றெல்லாம் குறிப்பிட்டிருந்ததை நீக்கிவிட்டு, உண்மையான செய்தி போல சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தெரியவந்தது.

வெங்கடேஷ் ஆறுமுகத்தின் பதிவுகள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது வைரல் ஆவது வாடிக்கையான ஒன்று. அவர் நகைச்சுவைக்காக வெளியிடும் பதிவை, நகைச்சுவை என்பதை அறிய உதவும் பகுதிகளை நீக்கிவிட்டு சமூக ஊடகங்களில் உண்மையான செய்தி போல பலரும் பதிவிட்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் கொரோனா பற்றி கிமு 400ம் நூற்றாண்டிலேயே போகர் சித்தர் எழுதிய பாடல் என்று ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அப்போதே அது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். சனீஸ்வர பகவான் கோவிலுக்கு மேல் செயற்கைக்கோள்கள் செயல்படாது என்று வெளியான வதந்தியை அடிப்படையாக வைத்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் பற்றி இவர் வெளியிட்டிருந்த பதிவும் வைரல் ஆனது.

தங்கம் விலை தொடர்பாக நகைச்சுவைக்காக வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர் வெளியிட்டிருந்த பதிவை, எடிட் செய்து உண்மையான நிகழ்வு போல தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உலகிலேயே அதிக அளவு தங்கம் வைத்துள்ள ‘தோண்டுறா’ நாடு மன்னர் என்று பரவும் புகைப்படம் மற்றும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

FacebookI X PostI Google News ChannelI Instagram

Avatar

Title:உலகிலேயே அதிக தங்கம் வைத்துள்ள ‘தோண்டுறா’ நாட்டு மன்னர் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian  

Result: False

Leave a Reply