
துபாயில் ஒரு தளத்தை அல்லது ஒரு குடியிருப்பு பகுதியை மட்டும் திருப்பிக்கொள்ளும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி அது சரியா என்று கேட்டிருந்தார். பிரம்மாண்ட கட்டிடத்தில் சில தளங்கள் மட்டும் திரும்புவது போன்று வீடியோ இருந்தது. அவர் அனுப்பிய தகவலில், “தொழில்நுட்பத்தின் அற்புதம். துபாயில் சமீபத்தில் திறக்கப்பட்ட கட்டிடத்தின் ஒரு தளத்தை அல்லது பிளாட்டை நாம் விரும்பிய வெவ்வேறு திசையில் நகர்த்திக் கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக், ட்விட்டரில் இந்த வீடியோவை யாரும் ஷேர் செய்துள்ளார்களா என்று பார்த்தோம். பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. அடிப்படை சட்டங்கள் அறிவோம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இதே பதிவை 2022 ஜூலை 22ம் தேதி பதிவிட்டிருந்தனர். பலரும் இதை பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
வீடியோவைப் பார்க்கும் போது கட்டிடத்தின் குறிப்பிட்ட தளம் மட்டும் திரும்புவது உண்மையானது போல தெரிந்தது. ஆனால், கட்டிடம் திரும்பும் போது அதன் அளவு சரியாக இருப்பது போல இல்லை. எனவே, இது 3டி ப்ரொஜெக்டர் படமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆய்வைத் தொடங்கினோம்.
துபாயில் திரும்பும் அல்லது சுற்றும் தன்மை கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா என்று தேடினோம். அப்படி ஒரு கட்டிடம் கட்டும் திட்டம் உள்ளது என்று செய்திகள் கிடைத்தன. ஆனால், திறக்கப்பட்டதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
எனவே, இந்த வீடியோவை புகைப்பட காட்சிகளாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, துபாயில் இந்த கட்டிடம் உள்ளது என்று குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோவை பகிர்ந்திருப்பது மட்டுமே கிடைத்தது. தொடர்ந்து தேடிய போது, அமெரிக்காவின் டாலஸ் (Dallas) நகரில் இந்த கட்டிடம் உள்ளது என்று ஒரு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது இந்த கட்டிடம் AT&T headquarters என்று தெரியவந்தது. மேலும், அந்த கட்டிடத்தின் வீடியோவும் கிடைத்தது. கட்டிடத்தில் குறிப்பிட்ட பகுதியில் ஒளிர் திரை அமைத்து 3டி காட்சிகளை வெளியிட்டு வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.
Sila Sveta என்ற நிறுவனம் இந்த 3டி காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர். Sila Sveta நிறுவனம் என்ன மாதிரியான வேலையை செய்கிறார்கள் என்று பார்த்தோம். கட்டிடங்களில் 3டி காட்சிகளை ஏற்படுத்துவது, விஆர் – மீடியா ஆர்ட் காட்சிகளை உருவாக்குவது உள்ளிட்ட பல வேலைகளை செய்து வருவதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் AT&T Discovery District கட்டிடத்தில் செய்து வரும் சில 3டி காட்சிகளின் வீடியோவையும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற வீடியோவை அதன் சமூக ஊடக பக்கங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் AT&T Discovery District என்ற ட்விட்டர் பக்கத்தில் அந்த கட்டிடத்தில் ஒளிர் திரையில் வெளியான வேறு சில 3டி காட்சிகளை காண முடிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருந்த கட்டிடமும், AT&T headquarters கட்டிடமும் ஒன்றுதான் என்பது தெரிந்தது.
இதை மேலும் உறுதி செய்துகொள்ள டாலஸ் நகரில் AT&T headquarters கட்டிடம் இருக்கும் பகுதியைக் கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் பார்த்தோம். அதில் அந்த கட்டிடம் நமக்கு தெளிவாகத் தெரிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் கட்டிடத்துக்கு அருகே சில மரங்கள் இருப்பதைக் காண முடிந்தது. அதே போன்ற மரங்கள் கூகுள் ஸ்ட்ரீட் வியூ மற்றும் AT&T Discovery District ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோவிலும் காண முடிந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள கட்டிடத்தில் வலது பக்கத்தில் தூண் போன்று இருப்பதை காண முடிந்தது. கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் பார்க்கும் போது அது பக்கத்தில் உள்ள கட்டிடத்துக்கு செல்லும் பாலம் போன்ற அமைப்பு என்று தெரிந்தது. மேலும், 2021ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் ஒருவர் இந்த வீடியோ அமெரிக்காவின் டாலஸ் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்படுத்தப்பட்ட படம் என்றும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த ஆதாரங்கள் அனைத்தையும் வைத்து இந்த கட்டிடம் துபாயில் இல்லை, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டாலஸ் நகரில் உள்ளது என்பது உறுதியாகிறது. மேலும், ஒரு தளம் அல்லது ஒரு தளத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் திருப்பிக்கொள்ளும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது இல்லை. 3டி – விஆர் ஒளிர் திரை காட்சியைக் கட்டிடம் திரும்புகிறது என்று தவறாகக் குறிப்பிட்டு பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
துபாயில் திறக்கப்பட்ட அதிநவீன தளங்களை திருப்பும் வசதி கொண்ட கட்டிடம் என்று பகிரப்படும் கட்டிடம் உண்மையானது இல்லை. இது அமெரிக்காவில் உள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:துபாயில் சுழலும் தளம் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
