இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் கைகோர்த்து வழக்கு தொடர்ந்ததா தி.மு.க அரசு?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் கைகோர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், நாசர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தார்கள் என்றும், அந்த வழக்கில் அரசுக்கு எதிரான தீர்ப்பு வந்ததாகவும் அந்த தீர்ப்பை தமிழக ஊடகங்கள் மறைத்தன என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் செய்தி ஒன்றை அனுப்பி, அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “*இந்துக் கோவிலுக்கான அதிரடி நீதிமன்ற தீர்ப்பு!*  *பெரம்பலூர் மாவட்டத்தில் களத்தூர் கிராமம்,* *முஸ்லீம்கள் அதிகம். அங்கே சிலை வைத்து ஹிந்துக்கள் பூஜை செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது எனவே தடை செய்ய ஸ்டாலின் மற்றும் தோழமை* *அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர் மஸ்தான் & நாசர்* *தலைமையில்*  *நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது இஸ்லாமிய அமைப்புகள்!* *ஆனால், உயர் நீதிமன்றம் ஹிந்துக்கள் இப்படி நினைத்தால் உங்கள் நிலை என்னாகும்? எனக்கேட்டு தள்ளுபடி செய்துள்ளது!* *ஆனால்* *தமிழ் நாட்டிலுள்ள செய்தி சேனல்கள், முன் களப் பணியாளர்கள் ஆகிவிட்டதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செய்தி வெளியிடவில்லை! அடுத்த மாநில செய்தி  ஊடகத்தினரே ஊடக அறம் காத்து செய்தி வெளியிட்டுள்ளனர்!  பாராட்டுவோம்!!* *இனி நீதி மன்றம்தான் இந்துக்களுக்குப் புகலிடம்!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஃபேஸ்புக்கில் இந்த பதிவை யாரும் பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். Muthu Kumaran என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 27ம் தேதி இந்த பதிவு மற்றும் மலையாள ஊடகம் ஒன்றின் வீடியோவோடு சேர்த்து பகிர்ந்திருந்தார். பரும் இந்த பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் இந்து – இஸ்லாமிய சமூகத்தினரிடையே பிரச்னை உள்ளதாகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நாசர், மஸ்தான் ஆகியோர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் பதிவிட்டுள்ளனர். இந்த பிரச்னை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதை ஊடகங்கள் மறைத்துவிட்டன என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, இது என்ன சம்பவம் எப்போது தீர்ப்பு வந்தது என்று ஆய்வு செய்தோம்.

கூகுளில் பெரம்பலூர், வி.களத்தூர், சென்னை உயர் நீதிமன்றம் என்று சில கீ வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது, 2021ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில், வி.களத்தூர் கிராமத்தில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிப்பதாகவும், அவர்கள் இந்து மத வழிபாடு, திருவிழாக்களுக்கு தடை ஏற்படுத்துவதாகவும் இரு தரப்பில் இருந்தும் வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2021 மே 8ம் தேதி இந்த செய்தியை பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. 

உண்மைப் பதிவைக் காண: hindutamil.in I Archive 1 I dailythanthi.com I Archive 2

மு.க.ஸ்டாலின் 2021 மே 7ம் தேதிதான் முதலமைச்சராகவே பதவியேற்றார். அமைச்சர்களாக செஞ்சி மஸ்தான், நாசர் ஆகியோரும் பொறுப்பேற்றனர். பொறுப்பேற்ற ஒரு நாளுக்குள்ளாக இஸ்லாமியர்களை தூண்டி வழக்கு போட வைத்து, வழக்கு விசாரணை முடிந்து, அன்றே தீர்ப்பு வெளியாகியிருக்க வாய்ப்பே இல்லை.

மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இருந்த மலையாள வீடியோவை பார்த்தோம். அதிலும் எந்த இடத்திலும் மு.க.ஸ்டாலின், செஞ்சி மஸ்தான், நாசர் ஆகியோர் தான் வழக்கு தொடர காரணம் என்று குறிப்பிடவில்லை. அந்த வீடியோ எப்போது பதிவிடப்பட்டது என்று தேடிப் பார்த்தோம். அது 2021ம் ஆண்டு மே மாதம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

2021ம் ஆண்டு மே மாதம் வெளியான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்போதே ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், 2021ம் ஆண்டு செய்தியை 2022 ஜூலையில் ஏன் ஊடகங்கள் வெளியிடவில்லை என்று குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரே செய்தியை ஒவ்வொரு நாளும் வெளியிட்டுக்கொண்டிருக்க முடியாது. பழைய செய்தியை நாம்தான் நம்முடைய தேவைக்கு ஏற்ப தேடிப் படிக்க வேண்டும். நாம் விரும்பும் நேரத்தில் எல்லாம் ஊடகங்கள் அந்த செய்தியை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவு முதிர்ச்சியின்மையையே காட்டும்.

உண்மைப் பதிவைக் காண: hcmadras.tn.nic.in I Archive

இந்த தீர்ப்பு நகலை சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தில் தேடி எடுத்தோம். ஏப்ரல் 30, 2021ம் தேதி தீர்ப்பு வெளியாகி இருந்தது. ஏப்ரல் 30, 2021ல் தி.மு.க தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2, 2021 அன்றுதான் நடந்தது. அப்படி இருக்கும் போது முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து எப்படி வழக்கு தொடர்ந்திருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. இதன் மூலம் போகிற போக்கில் எந்த ஆதாரமும் இன்றி ஸ்டாலின், மஸ்தான், நாசர் ஆகியோர் மீது குற்றஞ்சுமத்திப் பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் மூலம் நாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இஸ்லாமிய அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், நாசர் ஆகியோர் இணைந்து பெரம்பலூரில் உள்ள வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் கை கோர்த்து வழக்கு தொடர்ந்தார்கள் என்று பரவும் பதிவு தவறானது என்பதை தகுந்த  ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் கைகோர்த்து வழக்கு தொடர்ந்ததா தி.மு.க அரசு?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading