FACT CHECK: இந்தியாவின் கௌரவத்துக்கு எதிராகச் செயல்படும் காங்கிரஸ் என்று உமர் அப்துல்லா விமர்சித்தாரா?

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

இந்தியாவின் கௌரவத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சரும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா கூறியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா புகைப்படத்துடன் கூடிய ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. Omar Abdulla என்ற பெயருக்கு பதிலாக Farrago Abdullah என்று பெயர் இருந்தது. 

நிலைத் தகவலில், வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி பட்டம் ! காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா சோனியா காங்கிரஸ் கட்சியை எப்படி தோல் உரிக்கிறார் பாருங்கள் ? “பாரதிய ஜனதா கட்சி 20/30 வருடங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதும் ஒரு முறை கூட இந்தியாவின் கவுரவத்தை மட்டம் தட்டி, அவமானப்படுத்தி பேசியதில்லை. ஆனால் வெறும் 7 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியோ, இந்தியா முன்னேற்றம் காணும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அதை மட்டம் தட்டி அவமானப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறது.” இதை விடவா காங்கிரஸ் கட்சிக்கு அசிங்கம் வேண்டும்?” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

 இந்த பதிவை, Rajappa Thanjai என்பவர் 2021 ஜூன் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாரதிய ஜனதா கட்சி 20-30 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால் இந்தியாவின் கௌரவம், மரியாதைக்கு எதிராக எதையும் செய்தது இல்லை. ஆனால், காங்கிரஸ் வெறும் ஏழு ஆண்டுகள்தான் எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் இந்தியாவின் கௌரவம் மரியாதைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறியதாக பகிரப்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை பா.ஜ.க நீக்கியது, மாநில அந்தஸ்தைக் குறைத்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இப்படி காஷ்மீருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வந்துள்ள நிலையில் அதை ஆதரித்து உமர் அப்துல்லா ட்வீட் வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

மேலும், உமர் அப்துல்லா (Omar Abdullah)  பெயரில் இல்லாமல் Farrago Abdullah என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இது உமர் அப்துல்லாவின் ட்விட்டர் பக்கமாக இருக்காது என்று நமக்கு தெரிந்தது. ட்விட்டர் முகவரியே @abdullah_0mar என்று இருந்ததால், இது உமர் அப்துல்லாவின் ட்விட்டர் பக்கம் என்று கருதி பலரும் சமூக ஊடகங்களில் இதை பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Twitter I Archive

முதலில், Farrago Abdullah ட்விட்டர் கணக்கு பற்றி ஆய்வு செய்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு இடம் பெற்றிருந்தது. அதில் “அதிகாரப்பூர்வமற்ற அக்கவுண்ட், போலியானது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் இதற்கும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லாவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உறுதியானது.

போலியாக ஒருவர் உமர் அப்துல்லா பெயர் மற்றும் படத்துடன் போலியாக ட்வீட் அக்கவுண்டை தொடங்கி பதிவிட்டு வருகிறார். போலியான நபர் வெளியிடும் பதிவுகளை உமர் அப்துல்லா கூறினார் என்று பலரும் விஷமத்தனமாக பகிர்ந்து வருகின்றனர். இதன் அடிப்படையில் இந்தியாவின் கௌரவத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது என்று உமர் அப்துல்லா கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பா.ஜ.க-வை புகழ்ந்தும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தும் உமர் அப்துல்லா கருத்து வெளியிட்டதாக பரவும் ட்வீட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்தியாவின் கௌரவத்துக்கு எதிராகச் செயல்படும் காங்கிரஸ் என்று உமர் அப்துல்லா விமர்சித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False