FACT CHECK: அயன் மேன் கதாநாயகன் குடும்பத்துடன் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடினாரா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

அயன் மேன் படத்தில் ஹீரோவாக நடித்த ராபர்ட் ஜான் டவுனி தன் குடும்பத்தினருடன் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

ஐரோப்பியர் ஒருவர் தன் குடும்பத்தினருடன் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்று பாடல் பாடு நடனம் ஆடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயன் மேன் ( *Iron Man*) கதாநாயகன் *ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ராபர்ட் ஜான் டவுனி* (Robert John Downey) *தற்போது அவர் கொண்டாடுவது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை தான்* . அதுவும் தனது குழந்தைகளோடு இப்படி ஆனந்தமாக ஆடிப்பாடி. 😄👇🏾 _ஆனந்தத்தின் மறுபெயர் சனாதன ஹிந்து தர்மம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Usha Venugopal Iyengar என்பவர் 2021 ஜூலை 18 அன்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் உள்ள நபரைப் பார்க்கும் போது அயன் மேன் படத்தில் நடித்த ராபர்ட் ஜான் டவுனி போல இல்லை. உருவ ஒற்றுமை துளிகூட இல்லாத நபரை எதன் அடிப்படையில் நடிகர் ராபர்ட் ஜான் டவுனி என்று குறிப்பிட்டுப் பதிவிட்டார்களோ தெரியவில்லை. இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை தொடர்ந்தோம்.

முதலில் நடிகர் ராபர்ட் ஜான் டவுனி தன் குடும்பத்தினருடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினாரா, அது தொடர்பான வீடியோ, செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. நடிகர் ராபர்ட் ஜான் டவுனியின் குடும்பம் பற்றிப் பார்த்தோம்.

அவருக்கு முதல் மனைவி மூலம் ஒரு மகனும், இரண்டாவது மனைவி மூலம் ஒரு மகனும், மகளும் உள்ளார்கள் என்ற தகவல் கிடைத்தது. இதில் 2வது மனைவி மூலம் மூத்த மகன் கடந்த 2012ம் ஆண்டு பிறந்ததாகவும், மகள் 2016ம் ஆண்டு பிறந்ததாகவும் நமக்கு செய்திகள் கிடைத்தன. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் சிறுமி பெரியவராகவும், சிறுவன் குழந்தையாகவும் இருந்தான். இதன் மூலம் இது நடிகர் ராபர்ட் ஜான் டவுனியின் குடும்பம் இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

நடிகர் ராபர்ட் ஜான் டவுனியின் குடும்பத்தினர் புகைப்படம் கிடைக்கிறதா என்று கூகுளில் தேடினோம். அப்போது நடிகர் ராபர்ட் தன் மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் பல நமக்குக் கிடைத்தன. அந்த படங்களை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். இரண்டும் வெவ்வேறு குடும்பம் என்பதைக் கண்டறிய முடிந்தது.

இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2020ம் ஆண்டு முதல் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. ஐரோப்பாவில் ஒரு குடும்பத்தினர் நடத்திய கிருஷ்ண வழிபாடு என்று குறிப்பிட்டு இதை பகிர்ந்திருந்தனர்.

நீண்ட தேடலுக்குப் பிறகு யூடியூபில் Visvambhar Sheth என்ற ஐடி கொண்ட நபர் இந்த வீடியோவை 2020ம் ஆண்டு பதிவேற்றம் செய்திருந்தார். மேலும் ஹரே ராமா, ஹரோ கிருஷ்ணா தொடர்பாக பல வீடியோக்களை அவர் வெளியிட்டிருந்தார். 

அந்த வீடியோக்களில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருந்த சிறுமி, சிறுவன் இருந்தனர். மேலும், நடிகர் ராபர்ட் ஜான் டவுனி என்று கூறப்பட்ட நபரும் இருந்தார். அந்த வீடியோக்கள் மிகத் தெளிவாகவும் இருந்தன. அவர்கள் குடும்பமாக பக்தி பஜனை பாடலல்களை பாடி வெளியிட்டு வருகின்றனர். அவர்களைப் பற்றிய கூடுதல் விவரம் அறிய அவரது ஃபேஸ்புக் பக்கத்தை கண்டறிந்தோம். அதிலும் பாடகர், கீர்த்தனை பாடல் பாடகர், இசைக் கருவிகள் இசைப்பவர் என்று குறிப்பிட்டிருந்தாரே தவிர, எந்த ஊர் என்று குறிப்பிடவில்லை. 

Visvambhar Sheth என்ற நபர் தன் குடும்பத்துடன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று பாடல் பாடியதை எடுத்து ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஜான் டவுனியின் குடும்பம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அயன் மேன் படத்தின் ஹீரோ தன்னுடைய வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினார் என்று பகிரப்படும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அயன் மேன் கதாநாயகன் குடும்பத்துடன் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடினாரா?

Fact Check By: CHendur Pandian 

Result: False