கொரோனாவில் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தாரா பூங்கோதை ஆலடி அருணா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பூங்கோதை ஆலடி அருணா படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “செய்தி:-கொரனோவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய திமுக MLA பூங்கோதை எதிர்ப்பு. ஏன்டா நேற்று தான் சுடலை ஒன்றிணைவோம் மயிரை புடுங்குவோம் சொன்னாரு” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Bhuvaneshwaran R‎ என்பவர் நமது எடப்பாடியார் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 ஏப்ரல் 21 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னையில் மருத்துவர்கள் இருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த போது, அவர்கள் உடலை அடக்கம் செய்ய சுடுகாடு அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணாநகர் திருவேலங்காடு சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றபோது பொது மக்கள் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ-வும் மருத்துவருமான பூங்கோதை ஆலடி அருணாவும் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடியபோது கொரோனா பாதித்த பகுதிக்கு சென்று வந்தவர்களை ஆலங்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் முயன்றதாகவும் இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பொது மக்கள் சார்பில் தொகுதி எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா பேசினார் என்றும் குறிப்பிட்டிருந்தனர். மற்றபடி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக இல்லை.

maalaimalar.comArchived Link 1
tamil.samayam.comArchived Link 2

கூடுதல் விளக்கம் பெற பூங்கோதை ஆலடி அருணாவைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், “நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்ட மேலப்பாளையத்தில் நடந்த துக்க நிகழ்வில் பங்கேற்க தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலிருந்து ஒன்பது பேர் சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் கடையநல்லூர் திரும்பியபோது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிக்கு எந்த அனுமதியும் இன்றி சென்று வந்ததால் அவர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. கடையநல்லூரிலேயே அவர்களை தங்க வைக்காமல், ஆலங்குளத்தில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு அழைத்துவந்தனர். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் கடையநல்லூரில் இருந்து ஏன் அவர்களை இங்கே அழைத்து வந்தீர்கள், கடையநல்லூரிலேயே தங்க வைக்க வேண்டியதுதானே என்று போராட்டம் நடத்தினர். 

தகவல் அறிந்து சென்று மக்களை சமாதானம் செய்து அதிகாரிகளிடம் பேசினேன். அப்போது கடையநல்லூரில் தனிமைப்படுத்தும் வசதி இல்லாததால் இங்கே அழைத்து வந்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அனுமதி பெறாமல் திருநெல்வேலி சென்றுவந்துள்ளனர். அவர்களை கடையநல்லூரிலேயே தனிமைப்படுத்தினால் அவர்களுக்கு தாங்கள் செய்த தவறு தெரியாது. அவர்களுக்கு புத்திபுகட்டும் வகையில் ஆலங்குளம் கல்லூரியில் தங்க வைக்கிறோம்’ என்றனர்.

கடையநல்லூரில் தனிமைப்படுத்த இடம் இல்லை, வசதி இல்லை என்று கூறியிருந்தால் ஆலங்குளம் கல்லூரியில் தங்க வைக்க எந்த எதிர்ப்பும் வந்திருக்காது. மருத்துவர் என்ற முறையில், இவர்கள் இங்கேயே தங்கினாலும் எந்த பிரச்னையும் இல்லை என்பது எனக்கும் தெரியும். மக்களை சமாதானம் செய்திருப்பேன்.

ஆனால், ஆலங்குளத்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை. கொரோனா தொற்று இல்லாத பகுதியாக ஆலங்குளம் உள்ளது. மக்களுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்பதற்காக இதை செய்தேன் என்று மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக கூறியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். 

மேலும், மேலப்பாளையம் சென்று வந்தவர்களிடம் பேசியபோது நாங்கள் கடையநல்லூரில் தங்கத் தயாராக உள்ளோம். ஆனால், அதிகாரிகள்தான் இங்கே அழைத்து வந்தனர். கடையநல்லூரில் தங்க அனுமதித்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான் என்றனர். உடனே, கடையநல்லூர் எம்.எல்.ஏ-விடம் இதுபற்றி பேசினேன். அவர் ‘9 பேரையும் கடையநல்லூருக்கே அனுப்பிவையுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். வசதி செய்து தர தயார்’ என்றார்.

ஆலங்குளம் கல்லூரி முன்பு திண்டு நின்ற கிராம மக்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வு இன்றி, வாழ வழியின்றி அச்சத்தில் உள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களை அழைத்துச் செல்கின்றீர்களா, அல்லது அவர்களை நாங்கள் வெளியே இழுத்து வரட்டுமா என்று கேட்கின்றனர். வேறு பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக மக்களுக்கு ஆதரவாக பேசினேன். ஆனால், உண்மை என்ன என்று தெரியாமல் சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக போலீசில் புகாரும் அளித்துள்ளேன்” என்றார்.

இது தொடர்பாக பூங்கோதை ஆலடி அருணா பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி வீடியோ:

நம்முடைய ஆய்வில்,

கடையநல்லூரிலிருந்து வந்தவர்களை ஆலங்குளத்தில் தனிமைப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தி கிடைத்துள்ளது.

மக்களுக்கு ஆதரவாக ஆலங்குளம் எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா அதிகாரிகளிடம் பேசிய செய்தி கிடைத்துள்ளது.

கடையநல்லூரில் தனிமைப்படுத்த இடம், வசதி இருந்தும் ஆலங்குளத்தில் வேண்டுமென்றே தனிமைப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டதாகவும், அவர்களை கடையநல்லூரில் தங்க வைக்கும்படி வலியுறுத்தியதாகவும் பூங்கோதை ஆலடி அருணா நம்மிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய பூங்கோதை ஆலடி அருணா எதிர்ப்பு தெரிவித்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கொரோனாவில் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தாரா பூங்கோதை ஆலடி அருணா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •