வங்கதேசத்தில் இஸ்லாமியர்களுக்கு சமூக சேவை செய்து வந்த ஜோதிகா பாசு என்ற இந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தனர் என்றும் அதற்கு முன்பு அவரை தோப்புக்கரணம் போட வைத்தனர் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெண் ஒருவரை ஏராளமான பெண்கள் சூழ்ந்து கொண்டு தோப்புக்கரணம் போட வைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கடைசியில் முடியாது என்று அந்த பெண் தரையில் அமர்ந்து கண்ணீர்விடுகிறார். நிலைத் தகவலில், "வங்க தேசம்- இந்திய எதிரிக்கட்சிகள்(1) இந்தியாவில் வக்ஃப் வாரிய சட்ட சீர்திருத்தம் கூட்டு பாராளுமன்ற குழுவுக்கு சென்றிருக்கிறது. இதை எதிரிக்கட்சிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். பீஹாரிலிருந்து ஒரு முஸ்லிம் எம்.பி- நிதிஷ்குமார் கட்சியைச் சேர்ந்தவர்- மத சுதந்திரத்தில் தலையிட மோடி அரசுக்கு உரிமை கிடையாது என சொல்கிறார்.

இன்னொரு பக்கம் பக்கத்து நாடான வங்க தேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் படும் அவதி சொல்லி மாளாது. இதைப் பற்றி எந்த எதிர்க்கட்சியும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியதாக தெரியவில்லை.

மணிப்பூர் விஷயமாக மோடி பாராளுமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்திய ராகுல் போன்றவர்கள், மணிப்பூருக்கு சென்று ஆய்வு செய்த திமுகவின் கனிமொழி அம்மையார், கம்யூனிஸ்ட்டுகள் போன்றவர்கள் மருந்துக்கு ஒரு வார்த்தை கூட பக்கத்தில் வங்க தேசத்தில் துலுக்கனால் தாக்கப்படும் ஹிந்துக்களைப் பற்றி கரிசனமாக ஒரு வார்த்தை சொல்லவில்லை.அவமானம்.

இந்த வீடியோவில் வங்கதேசத்தில் ஒரு ஹிந்து மனிதாபிமானியை - சிறைப்பிடித்து- 20 தோப்புக்கரணம் போட வைத்துள்ளார்கள். இதற்கும் முன்னால், துலுக்கனின் வழக்கம் போல் பாலியல் பலாத்காரம் செய்து , தாக்கி, பின் பொதுவில் இவரின் துகிலை உரிந்து கடைசியில் கொன்றும் விட்டார்கள் என்று ட்விட்டரில் எழுதியிருக்கிறார், ஒரு நண்பர். துலுக்கச்சிகள் இதனை படம் பிடிக்கிறார்கள்.

இந்த ஹிந்து பெண்மணி , பரோபகாரியாம். உணவு, கல்வி என மத பேதம் இல்லாமல் அங்கே எல்லோருக்கும் உதவியிருக்கிறார். இவர் பெயர் ஜோதிகா பாசு என நினைக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அவாமி லீக் தலைவர்கள், ஆதரவாளர்கள் தாக்கப்படும் வீடியோக்களை எல்லாம் எடுத்து வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர் என்று வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தற்போது இஸ்லாமியர்கள் மத்தியில் சமூக சேவைகள் செய்து வந்த ஜோதிகா பாசு என்ற பெண்ணை தாக்கிய காட்சி என்று வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். மணிப்பூருக்காக குரல் கொடுத்தவர்கள் இந்த தாக்குதல் தொடர்பாக பேசவில்லையே என்று ஆதங்கப்பட்டுப் பதிவிட்டுள்ளனர்.

மணிப்பூர் என்பது இந்தியாவின் பகுதி. இந்தியாவில் இந்தியர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தது தவறு என்றும் வங்கதேசத்தில் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவதை இந்திய தலைவர்கள் கண்டிக்கவில்லை என்பது போலவும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த அரசியல் விளையாட்டுக்குள் நாம் செல்லவில்லை. இந்த பதிவில் குறிப்பிட்டது போன்று அந்த பெண் ஜோதிகா பாசு என்ற இந்துவா, இவரை இஸ்லாமியர்கள் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்களா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் சமீப நாட்களாக இந்த வீடியோவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. இவற்றுக்கு இடையே 2024 ஜூலை 17ம் தேதி வங்க மொழியில் வெளியான பதிவு ஒன்றைக் காண முடிந்தது. அதை மொழிபெயர்த்துப் பார்த்த போது, அந்த பெண்ணின் பெயர் சகரிகா அக்தர் (Sagarika Akhter) என்றும் இவர் ஈடன் பெண்கள் கல்லூரியில் சத்ரா லீக் (Chhatra League) நிர்வாகி என்றும், போராட்டத்தின் போது மாணவிகளிடம் சிக்கிய இவரைத் தோப்புக்கரணம் போட வைத்தனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். சத்ரா லீக் என்பது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவாகும்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் என்று ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய பிறகுதான் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியே வருவதற்கு முன்பு எடுக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடக்கும் போது எடுக்கப்பட்டது என்பதால் இந்த தகவல் நம்பும் வகையிலிருந்தது. மேலும் இந்த பதிவை வெளியிட்டவர் தன்னை பத்திரிகையாளர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்று தொடர்ந்து தேடிய போது வங்கதேசத்தைச் சேர்ந்த ஃபேக்ட் செக்கர் ஒருவர் இந்த வீடியோ தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

அதில் அவர், "அந்த பெண்ணின் பெயர் சகரிகா அக்தர். இவர் முஸ்லிம். ஈடன் பெண்கள் கல்லூரியின் சத்ரா லீக் தலைவர். இந்த வீடியோ ஜூலை 17ம் தேதி எடுக்கப்பட்டது. புனையப்பட்ட கதையில் குறிப்பிட்டது போன்று இவரது பெயர் ஜோதிகா பாசு இல்லை. மாணவர்களுக்கு எதிராக செயல்பட்டது, தன்னுடைய அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்களை சித்ரவதை செய்ததால் தண்டனைக்கு ஆளானார்" என்று குறிப்பிட்டு, வங்க மொழியில் வெளியான செய்தியையும் பதிவிட்டிருந்தார்.

Archive

அந்த செய்தியை திறந்து, கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் மொழிபெயர்த்துப் பார்த்தோம். அதில், ‘’அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவான சத்ரா லீக் நிர்வாகிகளைக் கல்லூரி மாணவிகள் பிடித்து தண்டனை அளித்தனர். தோப்புக்கரணம் போட வைத்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த பெண் இந்து மதத்தைச் சேர்ந்த சமூக சேவகி இல்லை என்பது தெரியவந்தது.

உண்மைப் பதிவைக் காண: dailyinqilab.com I Archive

சரி வங்கதேசத்தில் ஜோதிகா பாசு என்று இந்து மதத்தை சார்ந்த சமூக சேவகர் யாராவது இருந்தாரா, அவரை பாலியல் வன்முறை செய்து கொலை செய்தார்களா... அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று ஆங்கிலம், வங்க மொழியில் சில அடிப்படை வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. சமூக சேவகர் ஜோதிகா பாசு என்று எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் வங்கதேசத்தில் இந்து சமூக சேவகர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சியின் மாணவர் அணி நிர்வாகிகளை கல்லூரி மாணவிகள் தாக்கிய பழைய வீடியோவை எடுத்து, வங்கதேசத்தில் இந்து சமூக சேவகியை இஸ்லாமிய பெண்களே தாக்கி படுகொலை செய்தனர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேசத்தில் இந்து சமூக சேவகியை தாக்கும் இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False