சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழகம்

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

தலைகீழாக தொங்க விடப்பட்ட நபருக்கு பின்புறம் லத்தி போன்ற கம்பை நுழைத்து தாக்கும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சாத்தான் குளத்தில் அப்பாவி வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை எடப்பாடியின் ஏவல்துறை கொடுமை செய்த காட்சி ஒன்று வெளியாகி உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Job Prakash Dmk என்பவர் 2020 ஜூன் 27ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் தொடர்பாக நீதிமன்றம், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் உள்ள பிரச்னையாக, குறிப்பிட்ட சாதி, மதத்தினருக்கு எதிரான பிரச்னையாக மாற்றம் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

ஆசனவாயில் லத்தியை நுழைத்து சித்ரவதை செய்யப்பட்டது என்று கூறப்படவே, சமூக ஊடகங்களில் அது எப்படி தாக்குதல் நடத்த முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஆசனவாய் வழியாக லத்தியை நுழைத்து இப்படித்தான் தாக்குதல் நடத்துவார்கள் என்று விளக்கம் அளிக்கும் வகையில் வீடியோ வெளியானது. அதன்பிறகு அந்த வீடியோவை அப்படியே மாற்றி சாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் மீது நடந்த தாக்குதல் என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

Facebook LinkArchived Link

மிகக் கொடூரமாக இருந்ததால் வீடியோவைப் பார்க்கவே முடியவில்லை. வீடியோவில் தலைகீழாக தொங்கும் நபர் இந்தியில் பேசுவது போல உள்ளது. மேலும் அவர் பார்க்க ஜெயராஜ், ஃபெனிக்ஸ் தோற்றத்துடன் தொடர்புடையவராக இல்லை. இந்த சம்பவம் பகலில் நடந்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட யாரும் காவலர் போல இல்லை. இவை மட்டுமே இந்த வீடியோ தவறானது என்று நிரூபிக்க போதுமானதாக இல்லை.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிசர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போதும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதனால் வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்த நிலையில் இந்த வீடியோ சாத்தான்குளத்தில் எடுக்கப்பட்டது இல்லை.இது, நாக்பூரில் எடுக்கப்பட்டது. விஷமத்தனமாக சாத்தான்குளம் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பகிரப்படுகிறது. இந்த வீடியோவை பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் நாக்பூர், சித்ரவதை என பல கீ வார்த்தைகளை டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான கட்டுரை கிடைத்தது. அதன் அடிப்படையில் தொடர்ந்து தேடியபோது நாக்பூரில் இந்த சம்பவம் நடந்தது தொடர்பான அசல் வீடியோ கிடைத்தது. அதில் உள்ள இடம், நபர் எல்லாம் அப்படி இருப்பதை காண முடிந்தது. 

அந்த செய்தியை படித்த போது, நாக்பூரை சார்ந்த லாரி சரக்கு போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் டிரைவாக வேலை செய்து வந்த நபரை தலைகீழாக கட்டி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டு இருந்தது. அந்த டிரைவர், திருவனந்தபுரம் சென்று சரக்கு ஏற்றிவர பணம் பெற்றிருக்கிறார். ஆனால் திருவனந்தபுரம் செல்லாமல் குடித்து பணத்தை எல்லாம் செலவழித்ததாக கூறப்படுகிறது. ஏன் திருவனந்தபுரம் செல்லவில்லை என்று கேட்டபோது, உடல் நிலை சரியில்லை என்று கூறியிருக்கிறார் அந்த டிரைவர். அவரை அலுவலகத்துக்கு வரவழைத்து, சரக்கு போக்குவரத்து நிறுவன உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் ஒன்று சேர்ந்து இந்த சித்ரவதை செய்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. 

timesofindia.indiatimes.comArchived Link 1
nagpurtoday.inArchived Link 2

இதன் அடிப்படையில், இந்த வீடியோவில் உள்ளவர்கள் சாத்தான் குளத்தை சேர்ந்த ஜெயராஜ், ஃபெனிக்ஸ் இல்லை என்பது உறுதியாகிறது. நாக்பூரில் நடந்த வேறு ஒரு சம்பவ வீடியோவை எடுத்து சாத்தான்குளம் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், இந்த வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False