இலவச கார் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளதாக சீமான் கூறினாரா?

அரசியல் தமிழகம்

“வரும் தேர்தலில் வீட்டிற்கு வீடு இலவசமாக கார் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வரும் தேர்தலில் வீட்டிற்கு இலவசமாக கார் என்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளேன் – சீமான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நியூஸ் கார்டை தந்தி டி.வி 2019 நவம்பர் 27ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சீமான் பற்றி சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவுகின்றன. சீமானின் பேச்சுக்கள் கிண்டலாக பார்க்கப்படுகிறது. உண்மையில் அவர் அப்படி சொன்னாரா இல்லையா என்று தெரியாமலேயே பலரும் அதை ஷேர் செய்கின்றனர். தந்தி டி.வி-யே இந்த நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளது. எனவே, உண்மைதான் என்று நினைத்து பலரும் சீமானை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த ஒரு செய்தியை மட்டுமே வைத்துக்கொண்டு, சீமான் பேட்டரி கார் தரப்போகிறார் என்று அவரை கிண்டல் செய்யும் மீம்ஸ் முதல் பல சீரியசான பதிவுகள் வரை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறன. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

Facebook LinkArchived Link

உண்மையில் சீமான் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா என்று கண்டறிய, “வீட்டுக்கு வீடு கார், தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு – சீமான்” என்று டைப் செய்து தேடினோம். அப்போது, இது தொடர்பான செய்திகள் வந்து நம்முடைய ஸ்கிரீனில் கொட்டின.

Search Link

என்.டி.டி.வி, மாலை மலர் வெளியிட்டிருந்த செய்திகளைப் பார்த்தோம். மாலை மலர் செய்தியில், “கார் சொன்னால் ஓட்டு போடுவார்கள் – இலவச அறிவிப்புகளை விளாசிய சீமான்” என்று இருந்தது. செய்தியின் உள்ளே, “ஏதாவது செய்து மேலே வந்துவிடுங்கள் நண்பர்கள் என்னிடம் கூறுகின்றனர். அதனால் வரும் தேர்தலில் வீட்டுக்கு வீடு இலவசமாக ஒரு கார் கொடுப்பதாக அறிக்கை வெளியிடவுள்ளோம். சீமான் கார் தருகிறார் என்று அனைவரும் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்து விடுவார்கள். நான் முதலமைச்சர் ஆனபிறகு கார் வரப்போகிறது என காத்திருப்பார்கள். அப்போது கார் கொடுக்கும் திட்டம் அறிவித்து, ஒவ்வொரு வீடாகச் சென்று இதுதான் கார் என்று ‘அம்பேத்கார்’ படத்தை கொடுப்போம். ‘இவர்தான் உலகத்திலேயே பெரிய கார், அண்ணல் அம்பேத்கார், இவர் படத்தை மாட்டுங்கள்’ என்று சொல்வோம்” என்று பேசியது தெரிந்தது.

maalaimalar.comArchived Link 1
ndtv.comArchived Link 2

வீடியோ ஆதாரம் ஏதும் கிடைக்கிறதா என்று யூடியூபில் தேடினோம். அப்போது, “Seeman Car Comedy Speech in Madurai” என்று ஒரு வீடியோ நமக்கு கிடைத்தது. அதில், மேற்கண்ட பகுதி அப்படியே வந்தது. தொடக்கமே கார் பற்றிய பேச்சாகவே இருந்தது. அண்ணல் அம்பேத்கார் படம் தருவேன் என்ற சீமான் பேசினார்.

Archived Link

சீமான் கார் தருவேன் என்று தேர்தலில் அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறியது உண்மைதான். ஆனால், அது பேச்சின் தொடக்கம் மட்டுமே… உண்மையில் ஒரு பாதியை மட்டும் சொல்லிவிட்டு, மற்றொரு பாதியை பரபரப்புக்காக மறைத்துள்ளனர். இது சமூக ஊடகங்களில் பலமாதிரியாக எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. கார் என்று கூறி அம்பேத்கார் படம் தருவேன் என்று கூறியதே நிஜம். இதன் மூலம் மக்கள் தவறாக புரிந்துகொள்ளும் வகையில் இந்த பதிவு உள்ளது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இலவச கார் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளதாக சீமான் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •