
இடது காலில் காயம் என்று கூறிய மம்தா பானர்ஜி, திடீரென்று வலது காலில் கட்டுப் போட்டு வந்ததாக படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மம்தா பானர்ஜியின் இடது காலில் மாவு கட்டுப் போட்டு இருக்கும், மருத்துவமனையில் அவர் படுத்திருக்கும் புகைப்படம் மற்றும் சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வரும் புகைப்படத்தை சேர்த்து பதிவிட்டுள்ளனர். சக்கர நாற்காலியில் வரும்போது அவருக்கு வலது காலில் கட்டு உள்ளதாக காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “LEFTஆஆ RIGHTஆஆ ஒரே கன்பீசன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Ramjhi Issai Mazhalai என்பவர் 2021 மார்ச் 15 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் இந்த படத்தை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மம்தா பானர்ஜிக்கு உண்மையில் காயம் இல்லை, அவர் எழுந்து நடந்தார் என்று வதந்தி பரப்பப்பட்டது. அது போட்டோஷாப் புகைப்படம் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், மம்தா பானர்ஜிக்கு எந்த காலில் காயம் ஏற்பட்டது என்று தெரியாமல் மாற்றி மாற்றிக் கட்டுப் போட்டு வருகிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.
ஃபிளிப் (Flip image) அல்லது மிரர் இமேஜ் (Mirror image) எனப்படும் கண்ணாடியில் நாம் பார்க்கும் போது வலது இடதாகவும், இடது வலதாகவும் தெரியும் படங்களை வைத்த சமூக ஊடகங்களில் இது போன்று தவறான தகவலைப் பரப்புவது இது புதிது இல்லை. ராகுல் காந்தி இடது கையால் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார் என்றும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷ் மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் ஆகியோர் கையில் மாற்றி மாற்றி கட்டு போட்டிருந்தனர் என்றும் ஏற்கனவே இது போன்ற வதந்தி பரவியது. அது பற்றியும் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த புகைப்படங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த புகைப்படம் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபோது எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது. இந்த படத்தை மிரர் இமேஜாக வைத்துள்ளனர்.
மம்தா பானர்ஜியை சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வரும் நபரின் சட்டை பாக்கெட் வலது புறத்தில் இருப்பதைக் காணலாம். சட்டையில் வழக்கமாக இடது புறம்தான் பாக்கெட் வைத்து தைப்பது வழக்கம். சில சட்டைகளில் இரண்டு பக்கமும் இருக்கும். ஆனால், இந்த நபரின் சட்டையில் வலது புறத்தில் மட்டுமே பாக்கெட் உள்ளது. அசல் படத்தில் அந்த நபருக்கு இடது பக்கம்தான் பாக்கெட் உள்ளது. மம்தா பானர்ஜி காலிலும் இடது பக்கம்தான் கட்டு உள்ளது.

அசல் பதிவைக் காண: newsd.in I Archive 1 I indianexpress.com I Archive 2
எதற்கு பிரச்னை, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன வீடியோவைப் பார்த்தால் எது உண்மை எது பொய் என்று தெரிந்துவிடும் என்று வீடியோவை தேடினோம். எல்லா முன்னணி ஊடகங்களும் மம்தா டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்த வீடியோவை வெளியிட்டிருந்தன. இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட வீடியோவில் அவர் வெளியே வரும் காட்சிகளை பகிர்ந்திருந்தனர்.
ஆனால் அவர் காரில் ஏறும் காட்சிகள் கட் செய்யப்பட்டு இருந்தது. வலதுசாரி ஆதரவு ஊடகமான ரிப்பப்ளிக்கில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர வைத்துத் தள்ளிக்கொண்டு வருகின்றனர். காரில் அவரை கைத்தாங்கலாக உட்கார வைக்கின்றனர். இந்த வீடியோ காட்சிகளில் மம்தா பானர்ஜியின் இடது காலில் கட்டு இருப்பதைக் காண முடிகிறது.
இதன் மூலம் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன படத்தை எடுத்து அதை ஃபிளிப் அல்லது மிரர் இமேஜாக மாற்றி தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பரப்பி வருவது உறுதியாகிறது.
முடிவு:
மம்தா பானர்ஜி வலது, இடது கால்களில் மாற்றி மாற்றி கட்டு போட்டுக்கொண்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மம்தா பானர்ஜிக்கு எந்தக் காலில் காயம்?- மிரர் இமேஜை வைத்துப் பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False

Very thanks for the clear clarification if not it would have been a blunder mistake, thanks once again