இந்துக்களின் வாக்கு வேண்டாம்: மு.க.ஸ்டாலின் பற்றி பரவும் போலி ட்வீட்

அரசியல் | Politics

‘திருந்துமா மனித ஜென்மம்,’ என்று தலைப்பிட்டு கோவிலுக்கு செல்பவர்கள் வாக்கு தி.மு.க-வுக்கு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் சொல்வது போன்ற ட்விட்டர் பதிவு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை அறிய முடிவு செய்தோம்.

வதந்தியின் விவரம்:

திருந்துமா மனித ஜென்மம்

Archive Link

கோவிலுக்கு செல்லும் யாரும் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக, ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இந்துக்கள் வாக்கு வேண்டாம் என்று கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்ததாகவும், அதை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்தது போலவும் பதிவு உள்ளது. இது பார்ப்பதற்கு, ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ பதிவு போலவே உள்ளது. இந்து மதத்துக்கு எதிராக தி.மு.க கருத்து சொல்வது வழக்கமானதுதான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:

மு.க.ஸ்டாலின் பற்றி கூறப்படும் இந்த தகவல், கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகும். ஊடகங்களிலும் அதிக அளவில் பேசப்பட்ட செய்தியாகும். மு.க.ஸ்டாலின் பெயரில் போலியாக ட்விட்டர் பதிவு வெளியானது பற்றி ஏற்றி பி.பி.சி தமிழில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இது தொடர்பாக கூகுளில் தேடினோம். இது வெறும் வதந்தி என்பதற்கான நிறைய ஆதாரம் நமக்குக் கிடைத்தது.

இந்த வதந்திக்கு பதிலடி தரும் வகையில், கடந்த ஆண்டில், மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ விளக்கம் பற்றிய இணைப்பும் கிடைத்தது. அதில், “தன்னுடைய ட்வீட்டர் பக்கம் போலவே போலியாக புகைப்படம் தயாரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

Archive Link

இந்த போட்டோஷாப் வதந்தி பற்றி மு.க.ஸ்டாலின் சார்பாக, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இதன்படி, குறிப்பிட்ட பதிவு, கடந்த ஆண்டில் வெளியான போட்டோஷாப் செய்த போலியான ஒன்று எனவும், அதனை மீண்டும் தற்போது பகிர்ந்துள்ளார்கள் எனவும் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

இதுபோல, ஏற்கனவே மு.க.ஸ்டாலின் இந்து கோயில்களை இடிப்பேன் என்று கூறியதாக, சில நாட்கள் முன்பாக வதந்தி பரவிய நிலையில், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, தவறான செய்தி என்று ஏற்கனவே நாம் நிரூபித்துள்ளோம். அதைப் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும், இந்த போலிப் பதிவை மறுபகிர்வு செய்த சௌகிதார் விக்னேஷ்வரன், ஃபேஸ்புக்கில் தன்னைப் பற்றிய விவரம் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவருடைய பெயருக்கு முன்பு உள்ள சௌகிதார் அடைமொழி மற்றும் அவரது பக்கத்தில் பகிரப்படும் பதிவுகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது அவர் பா.ஜ.க ஆதரவாளர் என்பது உறுதியாகிறது. சுய அரசியல் காரணங்களுக்காக, அவர் இத்தகைய தவறான, சித்தரிக்கப்பட்ட பதிவுகளை வெளியிட்டு வருவதும் சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாகிறது.

இதுவரை செய்த ஆய்வின் அடிப்படையில், நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,

  1. கூகுள் தேடலில், செய்தி விஷமத்தனமானது என்று கட்டுரைகளே கிடைத்தன.
  2. தான் அவ்வாறு கூறவில்லை என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார்.
  3. இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி சென்னை மாநகர காவல் துறையில் புகார் அளித்ததற்கான ஆதாரம் நம்மிடம் உள்ளது.
  4. இந்த புகைப்படத்தை பதிவிட்டவர் பா.ஜ.க ஆர்வலராக இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலே, கிடைக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் இது போலியான தகவல் என்பது உறுதியாகிறது. தேர்தல் நேரம் என்பதால், இந்துக்களின் வாக்குகள் தி.மு.க-வுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஏற்கனவே பகிரப்பட்ட பழைய வதந்தியை மீண்டும் பகிர்ந்து வருகிறார்கள்  என்பது உறுதியாகியுள்ளது.

முடிவு

படத்தில் உள்ளது மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு இல்லை. போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:இந்துக்களின் வாக்கு வேண்டாம்: மு.க.ஸ்டாலின் பற்றி பரவும் போலி ட்வீட்

Fact Check By: Praveen Kumar 

Result: False