
மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனை விவசாயிகள் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

குறிப்பிட்ட பதிவைக் காண… Facebook I Archive 1 I Archive 2
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தனைப் போல உள்ள ஒருவர் தாக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாஜக மத்திய மந்திரி ஹர்ஷ வர்த்தன் விவசாயிகளால் தாக்கப்பட்ட சம்பவம்… இன்னும் இருக்கு….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை Kumaran Sundaram என்பவர் 2020 அக்டோபர் 1ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயிகள் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் மிகத் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ என்று பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இதை படிக்கலாமே: ஹரியானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ முகத்தில் சாணி பூசிய விவசாயிகள் என்று பரவும் தவறான தகவல்!
இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனை விவசாயிகள் தாக்கியதாக வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையிலிருந்து அகாலிதளம் வெளியேறியது. உணவு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வேளாண் மசோதா, சட்டம் தொடர்பாக ஒவ்வொரு தகவலையும் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தாக்கப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் வெளியானதாக நினைவில் இல்லை. உண்மையில் அவர் தாக்கப்பட்டு இருந்தால் அது மிகப்பெரிய செய்தியாக பேசப்பட்டு இருக்கும்.
ஒருவேளை முன்பு எப்போதாவது தாக்கப்பட்ட வீடியோவை தற்போது விவசாயிகள் மசோதா விவகாரத்தை வைத்து தற்போது நடந்தது போல வெளியிட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்தோம். வீடியோ தெளிவின்றி இருந்தது. அதில் உள்ள நபர் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தானா என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே, வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது 2016ம் ஆண்டு முதல் இந்த வீடியோ யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. அதில் பா.ஜ.க எம்.பி தாக்கப்பட்டார் என்று கூறப்பட்டு இருந்தது. 2020 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட சமூக ஊடக பதிவுகளில் பா.ஜ.க எம்.பி ஹர்ஷவர்த்தன் தாக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. வீடியோவில் இருப்பது ஹர்ஷ வர்த்தன் தானா இல்லையா என்று தெரியாத நிலையில் இது தற்போது நிகழ்ந்த சம்பவம் இல்லை என்பது மட்டும் உறுதியானது.
தொடர்ந்து வேறு வேறு காட்சிகளை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2016ம் ஆண்டு ஏ.என்.ஐ செய்தி ஊடகம் வெளியிட்ட ட்வீட் பதிவு ஒன்று கிடைத்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் இடம் பெற்றிருந்த காட்சி இருந்தது.
2016ம் ஆண்டு மத்திய இணை அமைச்சராக இருந்த பாபுல் சுப்ரியோ அசன்சால் பகுதிக்கு வந்த போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கிய காட்சி என்று கூறப்பட்டிருந்தது. அதில் எந்த இடத்திலும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தாக்கப்பட்டார் என்று குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் தாக்கப்பட்டவர் அமைச்சருடன் வந்த நபர் என்பது மட்டும் உறுதியானது. இது தொடர்பாக அப்போது என்டிடிவி உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதும் நமக்கு கிடைத்தது.

செய்தியைக் காண… ndtv.com I Archive
அது ஹர்ஷவர்த்தன் இல்லை என்றால் வேறு யார் என்ற கேள்வி எழுந்தது. இதனால் ஹர்ஷவர்த்தன் தாக்கப்பட்டார் என்பது போன்ற கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, அமைச்சர் ஹர்ஷவர்த்தன் வெளியிட்ட ட்வீட் ஒன்று கிடைத்தது.
அதில், “எனது பெயரில் ஒரு வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தவறான உள்ளடக்கத்தைக் கொண்டது, தீங்கிழைக்கும் நோக்கில் விஷமத்தனமாக பரப்பப்பட்டு வருகிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாபுல் சுப்ரியோ தாக்கப்பட்ட வீடியோவுக்கு வெளியான நிலையில் நவம்பரில் ஹர்ஷவர்த்தன் விளக்கம் அளித்துள்ளார்.
அதற்கு பதில் அளித்திருந்த ஒருவர் இது பா.ஜ.க நிர்வாகி, “சுப்ரதா மிஸ்ரா தாக்கப்பட்ட காட்சியை தவறாக ஹர்ஷ் வர்த்தன் தாக்கப்பட்ட காட்சி என்று பகிர்ந்து வருகின்றர்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட இந்த வீடியோவுக்குத்தான் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ 2016ல் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கும் விவசாய மசோதா போராட்டத்துக்கும் தொடர்பில்லை… தாக்கப்பட்டது மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் இல்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற தகவல் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
