கேன்சர் என்பது நோய் அல்ல; வியாபாரம்: வைரல் செய்தியால் அதிர்ச்சி

மருத்துவம் I Medical

“கேன்சர் என்பது நோயே இல்லை… அது வெறும் வியாபாரமே” என்று சமூக வலைத்தளங்களில்
அதிக அளவில் செய்தி பகிரப்படுகிறது. உண்மையில், புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா… வணிகத்துக்காகப் புற்றுநோய் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்களா என்று ஆய்வு செய்ய தீர்மானித்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு.

வதந்தியின் விவரம்

#புற்றுநோய்_CANCER கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோய் என்பது நோய் அல்ல #வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.

Archive link

உண்மை அறிவோம்

‘’இன்று அனைவரும் பயப்படக்கூடிய நோயாகப் புற்றுநோய் உள்ளது. அந்த நோய் பற்றிய பயம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அப்படி இருக்கையில், புற்றுநோய் என்பது நோயே இல்லை, அது வெறும் ஊட்டச்சத்து குறைபாடுதான். புற்றுநோய் பெயரால் மோசமான வியாபாரம் செய்யப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த இந்த பதிவைப் பகிருங்கள்,’’ என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.  புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு கிரிக்கெட்டில் ஜொலித்துக்கொண்டிருக்கும் யுவராஜ் சிங் படத்தை வைத்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியில் யுவராஜ் சிங் படத்தை பயன்படுத்தியுள்ளனர். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அரிய வகை புற்றுநோய் வந்தது. அவர் வெளிநாட்டில் சிகிச்சைப் பெற்று, உயிருடன் மீண்டு வந்து தற்போது கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். புற்றுநோயில் இருந்து மீண்டுவந்த யுவராஜ் சிங் படத்தை, குறிப்பிட்ட வதந்தியில் பயன்படுத்தியிருப்பது மக்களை குழப்பும் வகையில் அமைந்துள்ளது.

இதுதொடர்பாக வேறு ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அதில், பல இணைய தளங்கள் ஒரே செய்தியை வெளியிட்டுள்ளதாக, தெரியவந்தது.
ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, #Dailyhunt வெளியிட்ட செய்தியை காண இங்கே கிளிக் செய்யுங்கள். இந்த பதிவை யார் முதலில் வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை. இதே கட்டுரையை ஐபிசி தமிழ் என்ற இணையதளம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வடிவில் பகிர்ந்துள்ளது. வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். சில நிறுவனங்கள் இந்த செய்தியை சுருக்கியும் வெளியிட்டுள்ளன. இந்த கட்டுரையில் அவர்கள் அளித்திருக்கும் ஒரே ஆதாரம் ‘வேர்ல்ட் வித் அவுட் கேன்சர் ‘ என்ற புத்தகத்தை மட்டும்தான்.

மேலும், கேன்சர் தொடர்பாக, ஐ.பி.சி வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ளதும், நாம் குறிப்பிடும் பதிவில் உள்ளதும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக இருந்தன. இருப்பினும், வைட்டமின் பி17 -க்கு தடை விதிக்கப்பட்டது பற்றி எல்லாம் சற்று விரிவாக ஐ.பி.சி விவரித்துள்ளது. இதன் அடிப்படையில், நாம் சற்று விரிவாக ஆய்வு மேற்கொண்டோம்.

உடலில் மாறுபாடு அடைந்து அபரிமிதமாக வளர்ச்சி அடையும் செல்களையே புற்றுநோய் என்கிறோம். நம்முடைய உடலில் தினமும் ஆயிரக் கணக்கான புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அவற்றை நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுக்க 82 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைவாகவே உள்ளது.

நம்முடைய உடலில் முடி, நகம் தவிர்த்து எந்த இடத்தில் வேண்டுமானாலும் எந்த உறுப்பில் வேண்டுமானாலும் புற்றுநோய் ஏற்படலாம். இதில், நுரையீரல், மார்பகம், கர்ப்பப்பை, வாய், செரிமான மண்டலம், சினைப்பை உள்ளிட்ட உறுப்புக்களில் ஏற்படும் புற்றுநோயால் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில், நுரையீரல், வாய் புற்றுநோய் உள்ளிட்டவை தவிர்க்கக் கூடிய புற்றுநோயாக இருக்கின்றன. இது தொடர்பான விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த கட்டுரையில், வைட்டமின் பி17 குறைபாட்டால் புற்றுநோய் ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, மது அருந்துவது, காற்று மாசு, புற ஊதாக் கதிர்வீச்சு என புற்றுநோய் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. இது குறித்து விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அவரவர் உடல்நிலை, நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே, புற்றுநோய்க்கான வாய்ப்பு மாறுபடும். எனவே, வைட்டமின் பி17 குறைபாடு மட்டுமே காரணம் என்பது தவறு.

மேலே குறிப்பிட்ட பதிவில், புற்றுநோயை வைட்டமின் பி17 எப்படி குணமாக்குகிறது என்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதில், வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் ஸ்கார்வி பற்றி சொல்லப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில், கடலில் பயணம் மேற்கொண்டவர்களுக்கு ஸ்கார்வி என்ற நோய் ஏற்பட்டது. வைட்டமின் சி குறைபாட்டால் இது ஏற்பட்டது கண்டறியப்பட்டது. தற்போது, வைட்டமின் சி மாத்திரை வடிவில் வந்துவிட்டது. இதை ஆதாரமாகக் காட்டி, வைட்டமின் பி17 இருப்பதை உறுதி செய்ய முயன்றுள்ளனர்.

1952ம் ஆண்டு உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த லேட்ரையல் (Laetrile) என்ற மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இது வலி நிவாரணியாகவும் செயல்படும் தன்மை கொண்டது. ஆப்பிள் விதை, பாதாம் உள்ளிட்ட கொட்டை வகைகளில் உள்ள அமாக்தலின் என்ற ரசாயனத்தைப் பிரித்து இந்த லேட்ரையல் மருந்து தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்த மருந்து புற்றுநோய் சிகிச்சைக்கு உதவியாக இருக்கிறது, புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடியது என்று டாக்டர் கேர்ப்ஸ் தெரிவித்தார். இவரும், இவருடைய தந்தையும் இணைந்துதான் வைட்டமின் பி15ஐ கண்டறிந்தனர். அதனால், இதற்கு வைட்டமின் பி17 என்று பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்தான் புற்றுநோயைக் குணமாக்கும் தன்மை பி17-க்கு இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் பி17ஐ உறுதிபடுத்தும் வகையில் வெளியாகவில்லை.  இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். ஆனாலும், வைட்டமின் பி17 கேன்சர் சிகிச்சைக்கு உதவியாக இருப்பதாக அவ்வப்போது செய்தி மட்டும் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.

பி17 என்பது ஒரு வைட்டமினே இல்லை என்கிறது மருத்துவ உலகம். 1970-களின் இறுதியில் இந்த மருந்தை அமெரிக்காவின் எஃப்.டி.ஏ தடை செய்துவிட்டது.

இந்த மருந்து உடலில் சிதைக்கப்படும்போது, சயனைடாக மாறுகிறது. இது புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்று இந்த வதந்தியைப் பரப்புகின்றவர்கள் சொல்கின்றனர். ஆனால், அந்த மருந்துக்கு நல்ல செல், புற்றுநோய் பாதித்த செல் எது என்று கண்டறிந்து அழிக்கும் திறன் இல்லை. இதனால், நோயாளி உயிரிழப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறது ஒரு ஆய்வு. ஆய்வு முடிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இது குறித்து சென்னை குளோபல் மருத்துவமனை, புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் இயக்குநர் டாக்டர் ராஜா சுந்தரத்திடம் கேட்டோம். “புற்றுநோய் வர பல காரணங்கள் உள்ளன. வைட்டமின் பி17 பற்றாக்குறைதான் காரணம் என்று கூறுவது எல்லாம் வெறும் வதந்திதான். இது தொடர்பாக எந்த ஒரு ஆய்வு முடிவும் எங்களுக்கு வரவில்லை. ஆரம்பநிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே புற்றுநோயை வெல்ல முடியும் ” என்றார்.

புகைப்படம்: டாக்டர் ராஜா சுந்தரம்.

நாம் ஆய்வு மேற்கொண்ட வகையில் தெரியவந்த உண்மையின் விவரம்,

1) வைட்டமின் பி17 பற்றாக்குறைதான் புற்றுநோய்க்கு காரணம் என்பதற்கான ஆய்வு முடிவுகள் இல்லை.
2) வைட்டமின் பி17 புற்றுநோயை குணப்படுத்தும் என்பதற்கான ஆய்வு முடிவுகள் இல்லை.
3) வைட்டமின் பி17 என்று அழைக்கப்படும் லேட்ரைல் மருந்து அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.
4) லேட்ரைல் புற்றுநோயாளிகள் உயிரிழப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
5) டாக்டர் ராஜாசுந்தரம் மேற்கண்ட செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார்.

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்த செய்தி வெறும் புரளிதான் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. செய்தி நிறுவனங்கள், மக்களின் உடல்நலம் சார்ந்த செய்திகளை வெளியிடும்போது உரிய கவனத்துடன் செயல்பட்டால் இதுபோன்ற வதந்திகளைத் தவிர்க்க முடியும்.

முடிவு

உரிய ஆதாரங்கள், மருத்துவரின் பேட்டி அடிப்படையில் இந்த செய்தி பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத, பொய்யான செய்திகள், போலியான புகைப்படங்கள், வீடியோ, பதிவுகள் போன்றவற்றை நமது பார்வையாளர்கள் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:கேன்சர் என்பது நோய் அல்ல; வியாபாரம்: வைரல் செய்தியால் அதிர்ச்சி

Fact Check By: Praveen Kumar 

Result: False

 • 33
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  33
  Shares