
‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் விகாஸ் துபே,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதில், அமித் ஷா மற்றும் மாயாவதியுடன் நிற்கும் ஒருவரை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு, இவர்தான் விகாஸ் துபே என அடையாளப்படுத்தியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதை காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
சமீபத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்றதாகக் கூறி விகாஸ் துபே என்ற ரவுடி கைது செய்யப்பட்டான். அவனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் தப்ப முயற்சித்ததாகக் கூறி, உத்தரப் பிரதேச போலீசார் என்கவுன்டர் முறையில் சுட்டுக் கொன்றனர். இந்த செய்தி சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் தகவலும் பகிரப்பட்டுள்ளது. உண்மையில், அந்த புகைப்படங்களில் இருப்பவர் விகாஸ் துபே இல்லை.
எளிதான கூகுள் இமேஜ் தேடல் மூலமாகவே இதனை நாம் தெளிவாக உணரலாம்.

இவருக்கும், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் புகைப்பட பதிவில் உள்ள நபருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. சம்பந்தம் இல்லாத ஒருவரது புகைப்படத்தை இணைத்து, விகாஸ் துபே என வதந்தி பரப்பியுள்ளதாக, தெளிவாகிறது.

மேலும், இந்த புகைப்படத்தில் இருப்பவர் பெயரும் விகாஸ் துபேதான். ஆனால், பாஜகவைச் சேர்ந்த இவரும், என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபேவும் வேறு வேறு நபர்கள் ஆவர். இருவரும் ஒருவர்தான் என்று கூறுவது தவறு.

ரவுடி விகாஸ் துபேவுடன் தொடர்புபடுத்தி, தன்னைப் பற்றி பரவும் இத்தகைய வதந்தி பற்றி பாஜகவைச் சேர்ந்த விகாஸ் துபே, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
முடிவு:
எனவே ஒரே பெயரில் உள்ள 2 நபர்களை தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிரப்படுவதாக, நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் (+91 9049044263) என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Title:இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்கவுன்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே இல்லை!
Fact Check By: Pankaj IyerResult: False
