பீகாரில் கங்கை நதியில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலம் வீசப்படுகிறதா?

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

பாட்னாவில் கங்கை நதியில் கோவிட் 19 தொற்று நோயால் இறந்தவர்கள் சடலம் வீசப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

படகில் உடல் போன்று நீளமாக இருக்கும் ஒன்றை எடுத்து வீசும் மூன்று படங்களை கொலாஜ் செய்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பாட்னாவில் கோவிட் நோயாளிகளின் உடல்கள் கங்கை நதியில் வீசப்படுகின்றன. பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி இறந்த உடல்களை எப்படி கையாளுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு இது. முதலில் கர்நாடகாவில் தற்போது பீகாரில். பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் ஏன் கொரோனா மரணங்களை மறைக்கின்றன?” என்று இருந்தது.

நிலைத் தகவலில், “கங்கையில் வீசப்படும் கோவிட் தொற்று ஏற்பட்டவர்களின் சடலங்கள், கர்நாடகாவில் இதே போல் சடலங்களை வீசி எறிந்தார்கள், இப்பொழுது பீகாரில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மனிதர்களை, மக்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று..” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Muthu Krishnan என்பவர் 2020 ஜூலை 10ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கர்நாடாகாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை மறைப்பதாகவோ, பாதுகாப்பற்ற முறையில் அடக்கம் செய்வதாகவே குற்றச்சாட்டு எழுந்த நினைவு இல்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரே குழிக்குள் பல சடலங்களை இழுத்துப் போட்டதாக சர்ச்சை கிளம்பியது. அதற்கு முதல்வர் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்திருந்தனர். 

ஆனால், பீகார் சம்பவம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. உடலை எடுத்து வீசும் காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இவர்களுக்கு கொரோனா இருக்கிறது, இல்லை என்பது அடுத்த விஷயம், இப்படி உடல்களை வீசினால் அது கரை ஒதுங்கும்போது பிரச்னை ஏதும் வராதா, மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் இப்படி மருத்துவமனை நிர்வாகமே வீசச் செய்வது சரியா என்று ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.

இந்த சம்பவம் இப்போது நடந்ததா அல்லது பழைய படத்தை வைத்து பதிவை உருவாக்கியுள்ளார்களா என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. 

பதிவில் பீகார் தலைநகர் பாட்னாவில் கோவிட் நோயாளியின் உடன் கங்கை நதியில் வீசப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளதால் அதை கீ வார்த்தைகளாக பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட படம் ஒன்றும், இந்தியா டுடே வெளியிட்ட ஃபேக்ட் செக் கட்டுரையும் கிடைத்தது.

hindustantimes.comArchived Link

இந்துஸ்தான் டைம்ஸ் இ-பேப்பர் பக்கத்தில் இது தொடர்பான படம் வெளியாகி இருந்தது. அதில், பாட்னா மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் அடையாளம் தெரியாத நபரின் உடலை கங்கை நதியில் வீசினர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. பல உடல்கள் வீசப்பட்டன என்று இல்லை, மேலும் கொரோனா நோயாளியின் உடல் என்றும் இல்லை.  

பாட்னா மருத்துவக் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று தேடினோம். அப்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் நான்காவது மருத்துவமனையாக பாட்னா எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஜூலை 11 வெளியான செய்தி கிடைத்தது.

அதில், தற்போது என்.எம்.சி.எச் (நாலந்தா மருத்துவக் கல்லூரி), ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கயாவின் ஏ.என்.எம்.எம்.சி.எச் ஆகிய மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக பாட்னா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு மருத்துவம் பார்ப்பது இல்லை என்று தெரிந்தது.

timesofindia.indiatimes.comArchived Link

தொடர்ந்து தேடியபோது யாரும் உரிமை கோராதவர்களின் உடல் கங்கையில் வீசப்படுவதாக வெளியான தகவல் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று மருத்துவமனை நிர்வாகி கூறிய செய்தி கிடைத்தது. உடல்கள் வீசப்படுவது தொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸ் நிருபர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர்.

அப்போது மருத்துவமனை சூப்பிரெண்டென்ட் டாக்டர் சுனில் குமார் சாஹி விளக்கம் அளித்துள்ளார். “கிராமங்களில் இறந்தவர்கள் நம்பிக்கை காரணமாக ஆற்றில் உடலை வீசுவது தொடர்கிறது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வீசப்பட்டதா என்று விசாரணை நடத்தப்படும். கோவிட் தொற்றால் இறந்தவர் உடலை மாவட்ட நிர்வாகம், போலீஸ் துணையுடன் பாதுகாப்பாக அடக்கம் செய்கிறது” என்று அவர் கூறியிருந்தார். 

hindustantimes.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

படத்தை வெளியிட்ட இந்துஸ்தான் டைம்ஸ் உடல் வீசப்படுகிறது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் உடல்கள் என்று எங்கும் குறிப்பிடவில்லை.

பாட்னா மருத்துவக் கல்லூரியில் உள்ள அடையாளம் தெரியாத உடல் கங்கை ஆற்றில் வீசப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

பாட்னா மருத்துவக் கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்கள் மாவட்ட நிர்வாகமே அடக்கம் செய்கிறது என்று பாட்னா மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் உறுதி செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் கங்கையில் உடல் வீசப்பட்டது உண்மை. ஆனால் பல உடல்கள் வீசப்படவில்லை. மேலும், கொரோனாவால் இறந்தவர்கள் உடல் வீசப்படவில்லை. பாட்னா மருத்துவக் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பீகாரில் கங்கை நதியில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலம் வீசப்படுகிறதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False