தீபாவளிக்கு மாட்டிறைச்சி வாங்கும் மக்கள் என்று சன் நியூஸ் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

அரசியல் சமூகம் தமிழ்நாடு

தீபாவளியன்று பொது மக்கள் வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கிச் சென்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். சன் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு போல இருந்தது. அதில், “வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கி செல்லும் மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த நியூஸ் கார்டு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதா என்று பார்த்தோம். வீடியோ பதிவாக சன்டிவி வெளியிட்டிருந்ததைப் பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. Mohamed Abdul Kasim என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த பதிவை 2022 அக்டோபர் 24ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ் ஃபாண்ட், டிசைன் என அனைத்தும் சன் நியூஸ் வெளியிட்டது போல இருந்ததால் இந்த நியூஸ் கார்டு உண்மையானது என்று தெரிந்தது. எனவே, இந்த செய்தி உண்மையாக இருக்கலாம் என்றாலும் உறுதி செய்ய ஆய்வைத் தொடங்கினோம். முதலில் சன் நியூஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு இந்த வீடியோ கிடைக்கவில்லை. அதே நேரத்தில், அதே வீடியோவுடன் “தீபாவளியை முன்னிட்டு, மட்டன், பீஃப் உள்ளிட்ட இறைச்சிக் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்” என்று மற்றொரு வீடியோ கிடைத்தது. 

முதல் வீடியோவில் மாட்டிறைச்சி வாங்க வரிசையில் நின்ற மக்கள் என்று குறிப்பிட்டுவிட்டு, இரண்டாவது வீடியோவில் மட்டன், பீஃப் உள்ளிட்ட இறைச்சிக் கடைகளில் அலைமோதும் கூட்டம் என்று பதிவிட்டிருப்பதால் ஏதோ தவறு நடந்திருப்பது தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர், வண்ணாரப்பேட்டையில் உள்ள அந்த கடையில் மட்டன், சிக்கன்தான் விற்கப்படுகிறது. பீஃப் விற்கவில்லை. அதே நேரத்தில் தீபாவளியன்று பல பீஃப் கடைகளில் கூட்டமாக இருக்கும் வீடியோவும் எங்களுக்கு வந்தது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் தவறான தகவல் வெளியாகிவிட்டது. தவறு தெரிந்ததும் உடனடியாக அந்த வீடியோவை நீக்கிவிட்டோம். பின்னர் புதிதாக வீடியோ வெளியிட்டோம்” என்றார்.

வீடியோவில் தமிழ்நாடு என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. முதல் வீடியோவில் வண்ணாரப்பேட்டை என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே, கூகுள் மேப்-ல் வண்ணாரப்பேட்டை தமிழ்நாடு மட்டன், சிக்கன் ஸ்டால் என்று டைப் செய்து தேடினோம். அப்போது, அங்கு அப்படி அங்கு அப்படி ஒரு கடை இருப்பது தெரிந்தது. அதைப் பார்த்தோம். வாடிக்கையாளர் ஒருவர் கடையின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்த கடையின் பெயர்ப் பலகையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் பெயர்ப் பலகையும் ஒன்றாக இருந்தது. எனவே, இந்தக் கடையில்தான் இறைச்சி வாங்கி மக்கள் வரிசையில் நின்றார்கள் என்பது தெளிவானது.

அந்த புகைப்படத்தில் மூன்று பேரின் செல்போன் எண்களும் அளிக்கப்பட்டிருந்தது. அமீர் பாஷா என்பவரின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “தொலைக்காட்சியில் தவறான தகவலை அளித்துள்ளனர். எங்கள் கடையில் பீஃப் விற்பனை செய்வது இல்லை. மட்டன், சிக்கன் தான் விற்பனை செய்கிறோம். தவற்றைத் திருத்தி எங்களுக்கு எந்த பிரச்னையும் இன்றி அந்த ஊடகம் மீண்டும் செய்தி வெளியிட்டால் உதவியாக இருக்கும்” என்றார்.

நம்முடைய ஆய்வில், சன் நியூஸ் தவறான செய்தி வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடை உரிமையாளரும் பீஃப் விற்பனை செய்யப்படுவது இல்லை என்று உறுதி செய்துள்ளார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தீபாவளியன்று வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கிச் செல்லும் மக்கள் என்று பரவும் வீடியோ, புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தீபாவளிக்கு வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கிய மக்கள் என்று பரவும் வீடியோ மற்றும் பதிவு தவறானது என்பதை  தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தீபாவளிக்கு மாட்டிறைச்சி வாங்கும் மக்கள் என்று சன் நியூஸ் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False