
அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு மன வருத்தம் தெரிவித்த துரை வைகோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோரின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு மனமார வருத்தம் தெரிவிக்கிறேன்!! பாஜக தொண்டர்களிடமும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்!! – துரை வைகோ” என்று இருந்தது. இந்த பதிவை Rajkumar Bjp Nilgiri என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 7ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர் ம.தி.மு.க தலைமை கழக செயலாளர் துரை வைகோ. அண்ணாமலையைக் கடுமையாக விமர்சனம் செய்ததற்கு அவர் மன வருத்தம் தெரிவித்தார் என்று பா.ஜ.க ஆதரவாளர்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு ஏப்ரல் 6ம் தேதி வெளியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தேதியில் துரை வைகோ அளித்த பேட்டி, அறிக்கைகளைத் தேடிப் பார்த்தோம். துரை வைகோ வருத்தம் தெரிவித்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து அவர் அளித்த பேட்டிகள்தான் கிடைத்தன.
உண்மையில் இந்த நியூஸ் கார்டை ஐபிசி தமிழ் என்ற ஊடகம் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற எந்த நியூஸ் கார்டும் இல்லை. மார்ச் 23ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு ஒன்றை ஐபிசி தமிழ் வெளியிட்டிருந்தது. அதில், “மதிமுக தலைமைக் கழக செயலாளராகத் துரை வைகோ ஒருமனதாகத் தேர்வு. பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து, துரை வைகோ வருத்தம் தெரிவித்ததாகப் போலியாக நியூஸ் கார்டை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்பி வருவது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை ஐபிசி தமிழ் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்ய, அதன் சமூக ஊடக பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு பேசினோம். அவரும் “இந்த நியூஸ் கார்டு போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக தொண்டர்களிடம் துரை வைகோ வருத்தம் தெரிவித்தார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அண்ணாமலை மற்றும் பாஜக-வினரிடம் வருத்தம் தெரிவித்தார் துரை வைகோ என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பா.ஜ.க தொண்டர்களிடம் வருத்தம் தெரிவித்தாரா துரை வைகோ?
Fact Check By: Chendur PandianResult: False
