பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன்?- ஊடகச் செய்தியும், உண்மையும்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், அரை மயக்கத்தில் என்கவுன்ட்டர் செய்யும் பரிதாபம்,’’ என்று கூறி ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

கடந்த ஏப்ரல் 6, 2022 அன்று பல்வேறு ஊடகங்களிலும் வெளியான இந்த செய்தியில் பெரும்பாலும், ‘’நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஒரு 17 வயது சிறுவன் மயக்க நிலையில் சேர்க்கப்பட்டார். அவர், வீடியோ கேமிற்கு அடிமையானதால் அதில் வருவது போன்றே சுய நினைவின்றி கைகளை வைத்து துப்பாக்கியால் சுடுவதைப் போல பாவனை செய்கிறார்,’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஒரு சில ஊடகங்களில் இந்த சிறுவன் என்ன காரணத்திற்காக சிகிச்சைக்கு வந்தார், எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என எந்த விவரமும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

பாலிமர், மாலைமுரசு போன்ற ஊடகங்களில் வெளியான செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

Polimer FB Post Link I Malaimurasu News Link

உண்மை அறிவோம்:
இதன்பேரில், நமது ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் சார்பாக, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், ‘’குறிப்பிட்ட சிறுவன் இங்கே சிகிச்சைக்கு சேர்ந்தது உண்மைதான். அவன் வீடியோ கேம் அடிமையாகி, அரை மயக்கத்தில் இவ்வாறு எதுவும் செய்யவில்லை. உண்மையில், அவன் கையில் செல்ஃபோன் எதுவும் விளையாட தராததால், பெற்றோரை ஏமாற்றி, கவனத்தை ஈர்க்கும் வகையில் இவ்வாறு வேண்டுமென்றே கைகளை அசைத்து, துப்பாக்கியால் சுடுவது போல நடித்துள்ளான். ஏதாவது சாப்பிட்டதால், இப்படி பாதிப்பு ஏற்பட்டதா என்றும் அந்த சிறுவனிடம் நாங்கள் கேட்டோம். ஆனால், அவன் சரியான பதில் தரவில்லை. இறுதியாக, ‘உனக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. எனவே, உன் வாய் வழியாக டியூப் ஒன்றைச் செருகி, உன் வயிற்றில் என்ன உள்ளது என்று பார்க்கப் போகிறோம்,’ என விளையாட்டாக, மிரட்டினோம். உடனே அவன் பயந்து போய் கைகளை அசைப்பதை நிறுத்திவிட்டான். வேண்டுமென்றே இப்படிச் செய்ததாகக் கூறினான். எனவே, அவனுக்கு கேம் அடிமை, அரை மயக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தோம். உடனே அவனது பெற்றோர் அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.

அதேசமயம், மருத்துவமனைக்கு சிறுவன் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்த யாரோ ஒருவர் அதனை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். உடனே இந்த வீடியோ வேகமாகப் பரவ, ஊடகங்கள் சரியாக விசாரிக்காமல், அவசர அவசரமாக இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றனர். வீட்டிற்கு அவர்கள் சென்ற பிறகும் அவர்களிடம் பேசி, சிறுவன் மீண்டும் எதுவும் செய்கிறானா அல்லது பாதிப்பு உள்ளதா என்று விசாரித்து, உறுதிப்படுத்தியுள்ளோம்,’’ என்றார்.

இதுதொடர்பாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்தில் வெளியான செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

TOI Link

எனவே, சிறுவனுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும், வேண்டுமென்றே அவன் அப்படி நடித்ததாகவும் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன்?- ஊடகச் செய்தியும், உண்மையும்!

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading