
இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்னையை சமாளிக்க இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம் நேற்று நள்ளிரவு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும் பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து 215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும் தமிழ்நாடு, தாம்பரம் இந்திய இராணுவத் தளத்திலிருந்து மெட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த 200 இராணுவ வீரர்களும், முதல் கட்டமாக… கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள்.
இன்று இரவும் மீண்டும் வன்முறை பெரிய அளவில், தலை தூக்கும் என கருதப் படுவதால் இலங்கையின் வேண்டு கோளுக்கு இணங்க இவ் அவசர உதவி செய்யப் பட்டதாக டெல்லியில் இருந்து தெரிவிக்கப் படுகின்றது.
அத்துடன் இன்று மாலை, இந்திய போர் கப்பலான “விக்ரமாதித்யா”,4500 இராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு துறை முகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, இந்திய தூதரகத்தை சேர்ந்த, அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் ஒரே நாளில் ஆறாயிரம் இந்திய இராணுவம், இலங்கைக்கு வந்துள்ளதை இலங்கையின் இறையாண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் மிகுந்த கண்டனத்தை அரசுக்கு தெரிவித்ததுடன், கோத்தபாயாவை உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை குமரி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பதிவிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரித்தது விட்டது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை சமாளிக்க இந்திய ராணுவம் இலங்கைக்கு வந்ததாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் எந்த பிரிவிலிருந்து எத்தனை வீரர்கள் என்றார்கள் என்று துல்லியமாகச் சொன்னது போன்று பதிவிடப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக விமானந்தாங்கி கப்பலான விக்ரமாதித்யா இலங்கை செல்கிறது என்று கூறியது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பொருளாதார உதவிகளை அந்நாட்டு அரசு கேட்டுள்ளது. ராணுவ உதவி கேட்டதாக கூறியிருப்பது நம்பும் வகையில் இல்லை. எனவே இந்த பதிவு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.
இந்திய ராணுவம் இலங்கையில் தரையிறங்கினால் அது மிகப்பெரிய செய்தியாக வெளியாகி இருக்கும். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இந்திய ராணுவம் இலங்கை என்றது என்று பாதுகாப்புத் துறையிலிருந்து எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
எனவே, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இலங்கை பிரிவைத் தொடர்புகொண்டு இந்திய ராணுவம் இலங்கைக்கு வந்துள்ளதா என்று விசாரிக்கும் படி கேட்டுக்கொண்டோம். அப்போது அவர்கள், “இந்த தகவல் தவறானது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு நாங்கள் உறுதி செய்துவிட்டோம். இலங்கைக்கு இந்திய ராணுவம் வந்ததாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அந்த படம் கடந்த ஆண்டு இந்தியா – இலங்கை ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்துள்ளோம். மேலும், இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகமும் இந்த தகவலை மறுத்துள்ளது” என்று கூறினர். மேலும், இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட பத்திரிகை செய்தியின் இணைப்பையும் நமக்கு வழங்கினர்.

உண்மைப் பதிவைக் காண: defence.lk I Archive 1 I army.lk I Archive 2
அதில், “இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழைய வில்லை எனவும் இது தொடர்பில் சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இவ்வாறு பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் சித்தரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற ‘மித்ர சக்தி’ என்று அழைக்கப்படும் இந்திய-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியின் போது வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்” என்று இருந்தது. மித்ர சக்தி என்ற பெயரில் இந்திய – இலங்கை கூட்டு பயிற்சி நடந்தது தொடர்பான செய்தியை தேடினோம். 2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இது தொடர்பான செய்தியை இலங்கை தரைப்படை வெளியிட்டிருந்தது.
இதன் மூலம் இந்திய ராணுவம் இலங்கை சென்றது என்று பகிரப்படும் செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இலங்கைக்கு இந்திய ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது என்று பரவும் செய்தி தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
