FACT CHECK: கச்சத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என்று ஸ்டாலின் கூறினாரா?
கச்சத் தீவு நிர்வாக அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்! கச்சத்தீவு நிர்வாக அதிகாரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்" என்று இருந்தது.
இந்த பதிவை AIADMK Fast News TN என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Karupu Saravan என்பவர் 2021 மே 28ம் தேதி பகிர்ந்திருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
லட்சத்தீவில் மக்கள் விரோத சட்டங்களை வலுக்கட்டாயமாக திணித்து வரும் லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு கோரிகை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டில் லட்சத் தீவு என்பதற்குப் பதில் கட்சத் தீவு என்று இடம் பெற்றிருந்தது. பார்ப்பதற்கு அசல் நியூஸ் கார்டு போலவே உள்ளது. ஒரு வேளை தவறுதலாக நியூஸ் 7 வெளியிட்டுள்ளார்களா என்று சந்தேகத்துடன் அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். அப்போது இரண்டு பதிவுகள் நமக்குக் கிடைத்தன.
முதலில் 2021 மே 27ம் தேதி வெளியான நியூஸ் கார்டை பார்த்தோம். அதில் லட்சத்தீவு என்று மிகத் தெளிவாக இருந்தது. எனவே, இதை எடிட் செய்து "லட்சத்தீவு" என்பதில் ல - வை மட்டும் மாற்றி க என்று போட்டு இப்படி வதந்தி உருவாக்கியிருக்கலாம் என்று தெரிந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
அடுத்ததாக நியூஸ் 7 வெளியிட்ட மற்றொரு பதிவை பார்த்தோம். "இந்த செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை; உண்மை செய்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது!" என்று குறிப்பிட்டு அசல் மற்றும் போலி நியூஸ் கார்டை பகிர்ந்திருந்தனர். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதன் அடிப்படையில் கட்சத்தீவு நிர்வாக அதிகாரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கச்சத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என்று ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:கச்சத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என்று ஸ்டாலின் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered