
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை ஜெய் ஶ்ரீராம் சொல்லி இந்திய ரசிகர்கள் வெறுப்பேற்றினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 21ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மிட்செல் மார்ஷ் கப்பு மேல கால தூக்கி ஏன் வச்சான் ன்னு இப்போ தெரியுதா- 👏👏👌
கிரிக்கெட் விளையாடுற பாதி நாடு காறித் துப்பிருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தற்போது ஆஸ்திரேலிய வீரர்களை நோக்கி இந்திய ரசிகர்கள் ஜெய் ஶ்ரீராம் என கோஷம் எழுப்பி எரிச்சலூட்டியதாகவும் அதனால் ஆஸ்திரேலிய வீரர் உலகக் கோப்பை மீது கால் வைத்தது போலவும் பதிவிட்டுள்ளனர்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது இந்தியா பேட்டிங்கில் சொதப்பிய போது அகமதாபாத் அரங்கமே அமைதியாக இருந்தது. ஆனால் இந்த வீடியோவில் ரசிகர்கள் உற்சாகமாக ஜெய்ஶ்ரீராம் எழுப்பியது போல உள்ளது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ இறுதிப் போட்டியின் போது எடுக்கப்பட்டதா, ரசிகர்கள் ஜெய்ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பியது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் உள்ளிட்ட ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2023 அக்டோபர் மாதம் 28ம் தேதி யூடியூபில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்று கிடைத்தது. அந்த வீடியோவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் ஒன்றாக இருந்தது. ஆனால் ஆடியோ (ஒலி) மட்டும் மாற்றப்பட்டிருந்தது.
அதில் ரசிகர்கள் டேவிட் வார்னரை நோக்கி உற்சாகமாகக் குரல் எழுப்புகின்றனர். அவரும் புஷ்பா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நாயகன் செய்வது போன்று நடித்துக் காட்டுகிறார். உடனே ரசிகர்களும் உற்சாகமாகக் குரல் எழுப்புகின்றனர். உண்மையில் ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பி வெறுப்பேற்றியிருந்தால், டேவிட் வார்னர் உற்சாகமாக நடனமாடியிருக்க மாட்டார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி 2023 நவம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஆனால் இந்த வீடியோவோ 2023 அக்டோபர் 28ம் தேதி யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ இறுதிப் போட்டியின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.
அதே போல் டேவிட் வார்னர் புஷ்பா படத்தில் ஹீரோ செய்வது போன்று நடித்து இந்திய ரசிகர்களை ஈர்த்தவர். நமக்கு கிடைத்த வீடியோவில் அவர் புஷ்பா படத்தின் காட்சியை அவர் நடித்துக் காட்டுவது தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் ஆடியோ எடிட் செய்யப்பட்டிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை நோக்கி இந்திய ரசிகர்கள் ஜெய்ஶ்ரீராம் கோஷம் எழுப்பினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஜெய்ஶ்ரீராம் சொல்லி வெறுப்பேற்றும் இந்தியர்கள் என்று பரவும் வீடியோவில் ஆடியோ எடிட் செய்யப்பட்டு உள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஆஸ்திரேலிய வீரர்கள் முன்பு ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
