
லைலா மஜ்னுவின் ஒரிஜினல் புகைப்படம் இதுதான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆண், பெண் என இருவரின் புகைப்படத்தை ஒன்றாக சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், லைலா, மஜ்னு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “என்னங்கடா சொல்றீங்க.?
இதான் லைலா மஜ்னு ஒரிஜினல் ஃபோட்டோவா.?
இங்க இவய்ங்க எழுதின பாட்டெல்லாம் வெச்சு இத்தனை நாள் நான் பண்ணி வெச்சிருந்த கற்பனையை எல்லாம் ஒரே நாள்ல அந்தரசந்தரயா நொறுக்கிட்டீங்களேடா பாவிகளா.!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காலத்தால் அழியாத காதல் கதையாக லைலா – மஜ்னு காதல் கதை உள்ளது. இது 7ம் நூற்றாண்டின் அரேபியப் பகுதி காதல் கதை என்று கூறப்படுகிறது. 7ம் நூற்றாண்டில் புகைப்படக் கருவி எல்லாம் கிடையாது. உலகின் முதல் புகைப்படம் 1826ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. எனவே, 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களின் உண்மையான புகைப்படம் என்று பரவும் தகவல் தவறானது என்பது தெளிவாகத் தெரிகிறது.

உண்மைப் பதிவைக் காண: alamy.com I Archive
இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் யார் என்று அறிய ஆய்வு செய்து பார்த்தோம். முதலில் லைலா என்று குறிப்பிடப்பட்டுள்ள பெண்ணின் புகைப்படத்தை மட்டும் தனியாக எடுத்து கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அந்த பெண்ணின் புகைப்படத்தை சில புகைப்படங்களை விற்பனை செய்யும் இணையதளங்கள் விற்பனைக்காக வைத்திருந்ததைக் காண முடிந்தது. அதில் பெடூயின் (Bedouin) என்ற இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவாின் புகைப்படம், 1898-1914 காலகட்டத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சிரியா பகுதியைச் சார்ந்த பெடூயின் இன பெண் என்று இந்த பெண்ணின் வேறு சில புகைப்படங்களையும் அந்த புகைப்படங்களை விற்பனை செய்யும் தளங்கள் வைத்திருந்தன. அதை எடுத்து, சற்று எடிட் செய்து காதல் கதையில் வரும் லைலாவின் உண்மையான புகைப்படம் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: flickr.com I instagram.com
அடுத்ததாக மஜ்னு என்று குறிப்பிடப்பட்ட நபரின் புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். புகைப்படத்தில் இருக்கும் நபர் கத்தாரைச் சார்ந்த ஃபராஜ் பின் நாசர் பின் டல்முக் அல்-மர்ரி (araj bin Nasser bin Dalmuk Al-Marri) என்று குறிப்பிட்டு சில பதிவுகள் நமக்கு கிடைத்தன. இவரின் புகைப்படம் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி அருங்காட்சியகத்தில் உள்ளது என்று இந்த புகைப்படம் flickr.com என்ற இணையதள பக்கத்தில் 2008ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இவரைப் பற்றி கவிதை ஒன்று பாடப்பட்டு அது யூடியூபில் கூட பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை கண்டறிந்தோம்.
மேலும், பழைய புகைப்படங்களை எடுத்து லைலா – மஜ்னு என்று சிலர் தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டு சிலர் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவுகளும் நமக்கு கிடைத்தன. அதில், இந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் யார் என்றும் அவர்கள் வெளியிட்டிருந்தனர். இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இது லைலா – மஜ்னுவின் உண்மையான புகைப்படம் என்று குறிப்பிட்டிருந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
அரேபிய பகுதி பழங்குடி இனங்களைச் சேர்ந்த ஆண், பெண்ணின் புகைப்படங்களை எடுத்து லைலா மஜ்னுவின் உண்மையான புகைப்படம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:“லைலா-மஜ்னுவின் ஒரிஜினல் போட்டோ” என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


