
டெக்சாஸ் வெள்ள பாதிப்பு என்று 8க்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒன்று சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பல்வேறு மழை, வெள்ள பாதிப்பு வீடியோக்களை ஒன்று சேர்த்து ஒரே வீடியோவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “26 அடி உயரத்தில் வந்த திடீர் வெள்ளத்தால் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கடுமையான பாதிப்பு ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜூலை 4, 2025 அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குவாடலூப் (Guadalupe) நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில், டெக்சாஸில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு என்று பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அப்படிப் பரவும் பல வீடியோக்களை ஒன்று சேர்த்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதில் ஒரு வீடியோவை முன்பு நாமே ஃபேக்ட் செக் செய்திருந்தோம். பல வீடியோக்களை பார்த்தது போல இருந்தது. எனவே, இந்த வீடியோக்களை ஆய்வு செய்தோம். முதலில் உயரமான இடத்திலிருந்து வெள்ளம் வீடுகளை அடித்துக்கொண்டு வரும் வீடியோ இருந்தது. இந்த வீடியோவை ஏற்கனவே ஃபேக்ட் செக் செய்திருந்தோம். கேதார்நாத்தில் நிலச்சரிவு என்று முன்பு இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். உண்மையில் அது ஜப்பானை சேர்ந்தது என்று உறுதி செய்திருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக வெள்ளம் பாய்ந்து செல்லும் வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். அந்த காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அந்த வீடியோ 2024 நவம்பர் மாதம் 16ம் தேதி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்தது. அதில் ஸ்பெயினின் மாலாகாவில் (Malaga, Spain) ஏற்பட்ட வெள்ளம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்ததாக நதியின் கரையிலிருந்த கட்டிடம் ஒன்று ஆற்றுக்குள் விழும் வீடியோ காட்சியை ஆய்வு செய்தோம். அந்த வீடியோ 2022ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தது. யெல்லோ ஸ்டோன் வெள்ளம், ஜூன் 13, 2022 (Yellowstone River flood, June 13, 2022) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இதுவும் 2025 ஜூலை டெக்சாஸ் வெள்ளத்திற்குத் தொடர்பில்லாதது என்பது உறுதியானது.
அடுத்ததாக வெள்ளத்தில் வெள்ளை நிற பங்களா ஒன்று அடித்துச் செல்லப்படும் காட்சியை ஆய்வு செய்தோம். அந்த வீடியோ 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி யூடியூபில் reuters.com ஊடகத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம். அதில் அலாஸ்காவில் ஏற்பட்ட வெள்ளம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்ததாக கட்டிடத்தின் கதவை உடைத்துக்கொண்டு வெள்ள நீர் உள்ளே நுழையும் வீடியோவை ஆய்வு செய்தோம். 2024 ஜனவரி 24ம் தேதி அந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், ஓசியானியாவில் உள்ள மார்ஷல் தீவில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தை வெள்ளம் அழித்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்ததாக வெள்ளை நிற பங்களா நிலச்சரிவு காரணமாக சரிந்து விழும் வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். டிக்டாக்கில் பலரும் அந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று கண்டறிய முடியவில்லை. யூடியூபில் 2025 ஜூன் 9ம் தேதி அந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ டெக்ஸாஸ் வெள்ளத்துடன் தொடர்புடையது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக ஒரு கட்டிடத்தை வெள்ளநீர் சூழ்ந்திருக்கும் காட்சியை ஆய்வு செய்தோம். அந்த வீடியோ கடந்த 2024 அக்டோபர் 2ம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், அமெரிக்காவின் கிழக்கு டென்னசியில் ஒரு குடும்பம் ஹெலீன் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் சிக்கியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்ததாக வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச் செல்லப்படும் காட்சியை ஆய்வு செய்தோம். அந்த வீடியோ 2021 ஜூலை 15ம் தேதி யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இதுவும் தற்போதைய டெக்ஸாஸ் சம்பவத்துடன் தொடர்புடையது இல்லை என்பது உறுதியானது.
அடுத்ததாக வீட்டின் கதவைத் திறந்தால் வெள்ளம் பாயும் காட்சியை ஆய்வு செய்தோம். அந்த வீடியோவும் எங்கு எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை. அந்த வீடியோவை இந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி அதாவது டெக்ஸாஸ் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு சிலர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தனர்.
அடுத்ததாக வரிசையாகக் கட்டப்பட்டிருந்த கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோவை ஆய்வு செய்தோம். அந்த வீடியோவில் உள்ள கடைகளில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிகிறது. தொடர்ந்து தேடிய போது அந்த வீடியோ இந்தியாவில் டேராடூனில் எடுக்கப்பட்டது என்று சிலர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. எனவே, இதுவும் டெக்ஸாஸ் வீடியோ இல்லை என்பது உறுதியானது.
முடிவு:
பழைய வீடியோக்களை ஒன்று சேர்த்து டெக்ஸாஸ் வெள்ள பாதிப்பு என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:டெக்சாஸ் வெள்ள பாதிப்பு என்று பரவும் வீடியோக்கள் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
