திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையில் கொள்ளையடித்தவர்களை 24 மணி நேரத்துக்குள் தமிழக போலீசார் பிடித்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Trichy Police 2.png
Facebook LinkArchived Link

தமிழ்நாடு காவல் துறையின் லோகோவை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், "திருச்சி லலிதா ஜுவெல்லரியில் நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள்.மேலும் பல மாநிலங்களில் கைவரிசை காட்டி சிக்காமல் இருந்த கொள்ளையர்களை 24மணி நேரத்தில் பிடித்த தமிழக காவல்துறை....பாராட்டலாமே" என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த பதிவை, தமிழ் நேசன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் - நல்வினை விஸ்வ ராஜு வழக்கறிஞர் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 3ம் தேதி வெளியிட்டிருந்தார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 2ம் தேதி இரவு பின்புறம் சுவற்றில் ஓட்டைப் போட்டு உள்ளே புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்றனர். மிகவும் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர் திருச்சி போலீசார்.

இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் பலரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், ஊடகங்கள் பரபரப்புக்காக கொள்ளையர்கள் கைது என்று செய்தியைப் பரப்பி வருகின்றன. அதை நம்பி பலரும் கொள்ளையர்கள் கைது என்று தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தகவலை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் - நல்வினை விஸ்வ ராஜு வழக்கறிஞர் பக்கத்தில் இந்த பதிவு வெளியாகி உள்ளது.

திருச்சி நகைக் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்களா என்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். விசாரணை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளனர், குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்று தெரிவித்தனர். விசாரணை தீவிரமாக உள்ளதால் அது பற்றி விரிவாகப் பேச முடியாது என்று கூறினர்.

நகைக்கடையில் கொள்ளையடித்தவர்கள் கைது என்று எப்படி பரவியது என்று தேடினோம். அப்போது, புதுக்கோட்டையில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த ஐந்து பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற செய்தி கிடைத்தது.இதைத் தொடர்ந்து கொள்ளையர்கள் கிடைத்துவிட்டது போல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உண்மையில், அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், பெட்ஷீட் விற்பனை செய்ய அவர்கள் வந்திருப்பதும் லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளைக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிந்து அவர்களை அனுப்பிவிட்டதாகவும் செய்திகள் கிடைத்தன.

Trichy Police 3.png
DinamaniArchived Link 1
One India TamilArchived Link 2

இதற்கிடையே திருவாரூரில் ஐந்து கிலோ தங்க நகையுடன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த நகை லலிதா ஜூவல்லரி கடையில் எடுக்கப்பட்டதாக இருக்கலாமா என்று ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆனால் அது லலிதா ஜூவல்லரி நகைகடையில் திருடப்பட்டதுதான் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில ஊடகங்கள் ஆய்வு நடந்து வருகிறது, தனிப்படை போலீசார் திருவாரூர் சென்றுள்ளனர் என்கின்றனர். அதே நேரத்தில் திருடர்கள் நகைக்கடையில் நடந்துகொண்டதைப் பார்க்கையில் அவர்கள் நிச்சயம் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் என்று அடித்து கூறுகின்றன மீடியாக்கள்!

News18 TamilArchived Link 1
polimernews.comArchived Link 2

அக்டோபர் 4, 2019 காலை ஒன்பது மணிக்கு வெளியான விகடன் செய்தியில், 48 மணி நேரம் ஆன நிலையில் குற்றவாளிகளை போலீசார் நெருங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அதில் திருவாரூரில் சிக்கியவர்கள் திருச்சி நகைக்கடையில் தொடர்புடையவர்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளனர். அனைத்து குற்றவாளிகளையும் பிடிக்கவில்லை, ஒருவர் மட்டுமே சிக்கியுள்ளார், திருடப்பட்ட நகை அனைத்தும் மீட்கப்படவில்லை, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்பது இதன் மூலம் உறுதியானது.

Vikatan.comArchived Link

நகைக் கடைத் திருடர்களை பிடித்துவிட்டதாக திருச்சி காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள். காட்சி ஊடகங்கள் திருட்டு எப்படி நடந்தது, போலீசார் எப்படி ஆய்வு செய்கிறார்கள் என்று நொடிக்கு ஒரு அப்டேட் கொடுக்கும் அவசரத்தில் பல தகவல்களை பரப்பி வருகின்றனர். அதன்படி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களை கைது என்று தவறாக செய்தி பரப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த தவறான செய்தியை அடிப்படையாகக் கொண்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் சிக்கினார்கள் என்று தவறான தகவலை பரப்பியது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:திருச்சி நகைக்கடை கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False