
அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை இல்லை என்றால் விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா கூறியது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எச்சரிக்கை. ஆட்டு குட்டி அண்ணா மலைக்கு நாவடக்கம் தேவை. ஊடகங்களைப் பகைத்தால் தேதிமுக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் அண்ணாமலைக்கும் – பேராசிரியர் ஜாவருல்லா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
நியூஸ் கார்டில் நியூஸ்18 தமிழ்நாடு என்று இருந்தாலும் இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போதே இது போலியானது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. தே.மு.தி.க என்பதை தேதிமுக என்று குறிப்பிட்டுள்ளனர். ஜவாஹிருல்லாவின் பெயரைக் கூட சரியாக எழுதத் தெரியாமல் ஹாவருல்லா என்று குறிப்பிட்டுள்ளனர்.
பார்க்கும் போதே போலியானது என்று தெரிந்தாலும் ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம். முதலில் இந்த நியூஸ் கார்டை நியூஸ் 18 இணையப் பொறுப்பாளருக்கு அனுப்பி வைத்தோம். அவரும் இது போலியானது என்று தெரிவித்தார்.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அடுத்ததாக ஜவாஹிருல்லா அண்ணாமலை, விஜயகாந்த் தொடர்பாக கருத்து ஏதும் தெரிவித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். அதில், “அன்புமிக்க தே.மு.தி.க. நிறுவனர் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் குறித்து நியூஸ் 18 உள்ளிட்ட எந்த ஊடகத்திற்கும் எவ்வித பேட்டியும் சமீபத்தில் நான் அளிக்காத நிலையில் சில விஷமிகள் என்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பொய் பதிவுகளைச் செய்து வருகின்றனர். இந்த குறு மதியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் இந்த தகவல் மற்றும் நியூஸ் கார்டு என அனைத்தும் போலியானது என்பது உறுதியானது.
முடிவு:
விஜயகாந்த் நிலைதான் அண்ணாமலைக்கு ஏற்படும் என்று ஜவாஹிருல்லா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:“அண்ணாமலைக்கு விஜயகாந்த் நிலைதான் ஏற்படும்” என்று ஜவாஹிருல்லா எச்சரிக்கை விடுத்தாரா?
Written By: Chendur PandianResult: False


