மாரிதாஸ் தலைமறைவு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
மாரிதாஸ் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நீக்கியதைத் தொடர்ந்து மாரிதாஸ் தலைமறைவு என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரபல வலதுசாரி யூடியூபர் மாரிதாஸ் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "தலைமறைவான மாரிதாஸ் தேடுதல் பணியில் 2 தனிப்படை! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட பா.ஜ.க ஆதரவாளர் 'யூடியூப் மாரிதாஸ்' மீது தொடரப்பட்ட வழக்கினை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, பா.ஜ.க. மூத்த தலைவர்களின் ஆலோசனையின் படி மாரிதாஸ் தலைமறைவாகியுள்ளதாக தகவல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Valarmathi என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் நீக்கியது. இதைத் தொடர்ந்து மாரிதாஸ் மீதான வழக்கை மீண்டும் போலீசார் விசாரிக்க உள்ளனர். இந்த சூழலில் அவர் தலைமறைவாக உள்ளார் என்று சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் ஜூனியர் விகடன் பயன்படுத்தும் ஃபாண்ட் போல உள்ளது. ஆனால், பின்னணி டிசைனின் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. எனவே, இது போலியானது என்று தெளிவாகத் தெரிகிறது.
இதை உறுதி செய்துகொள்ள ஜனவரி 10, 2023 அன்று ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் மாரிதாஸ் தொடர்பாக எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, ஜூனியர் விகடன் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மாரிதாஸ் தலைமறைவாக உள்ளார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நீக்கியதைத் தொடர்ந்து மாரிதாஸ் தலைமறைவு என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:மாரிதாஸ் தலைமறைவு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False