FACT CHECK: 1966ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பசு பாதுகாப்பு பற்றி காமராஜர் பேசினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

1966ம் ஆண்டு பசு பாதுகாப்பு பற்றி ஜனசங்க உறுப்பினரின் கேள்விக்கு காமராஜர் பதில் அளித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

காமராஜர் நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு லால் பகதூர் சாஸ்திரி போன்று தோற்றம் அளிக்கும் நபரிடம் பேசுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1966-இல்பசு பாதுகாப்புசட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய ஜனசங்க உறுப்பினர் ஒருவர், பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியைப் பார்த்துஇதுபற்றி ஆளும் கட்சியின் கருத்து என்ன?’ எனக் கேட்டார். அதற்கு சாஸ்திரிஇதுபற்றி எம் கட்சியின் தலைவர் காமராஜர் பதிலளிப்பார்என்று சொன்னார்.

காமராஜர் அளித்த பதில் இதோ; ‘என்ன இப்போ.. பசுவுக்காக இவங்க ரொம்ப வருத்தப் படறாங்கன்னேன்..! மனுசனுக்குக் குந்த குடிசையில்ல.. கட்ட துணியில்ல.. அடுத்த வேளை சோத்துக்கு ஆலாப் பறக்கிறான். ஆனா இவுங்க பசு மாட்ட வச்சி பாலிடிக்ஸ் பண்ணப் பாக்குறாங்க..! அட.. மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன்..! இவங்க பூர்வீகக் கதை நமக்குத் தெரியாதான்னேன்..! இந்த வன்முறைக் கும்பல்தானே தேசப்பிதா காந்தியடிகள் உயிரையே குடிச்சது..! இன்னும் யார் யார் உயிரைக் குடிக்க அலையிறாங்க..! எத்தனைப் பிரச்சனை நம்ம கண்ணு முன்னாலே கெடக்கு.. நாம இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு.. இந்த நிலைமையில இந்த ஜனசங்க ஆசாமிங்க நம்மை, காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துக்கிட்டுப் போறான்னேன்..!”

இவ்வாறு பேசிய காமராஜர் மீது கடும் ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல் டெல்லியில் அவரது வீட்டை முற்றுகையிட்டு அவரை உயிரோடு கொளுத்த முயன்றனர்.

வரலாறு முக்கியம் மக்களே.. 

இல்லன்னா எந்த நாதாரி கூட்டம் காமராஜரை கொல்ல முயன்றதோ அதே கூட்டம் காமராஜருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்ற போர்வையில் நம்மை ஏமாற்றுமா..” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Michael Raj Y என்பவர் 2021 ஜூலை 27 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தில் உள்ள நபர் லால் பகதூர் சாஸ்திரி என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் ஜன சங்க உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு காமராஜரை பதில் அளிக்கும்படி அப்போது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி கேட்டுக்கொண்டார் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் அவர்கள் இருவரும் உள்ள புகைப்படம் என்ற தவறான எண்ணம் ஏற்படும் வகையிலிருந்தது. மேலும், லால் பகதூர் சாஸ்திரி 1966ம் ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். காமராஜர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அப்படி இருக்கும்போது எப்படி அவர் நாடாளுமன்றத்தில் பேச முடியும் என்ற கேள்வி எழுந்தது. எனவே, இந்த பதிவு பற்றி ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: veethi.com I Archive

முதலில் படத்தில் இருக்கும் நபர் யார் என்பதை அறிய ஆய்வு செய்தோம். லால் பகதூர் சாஸ்திரியுடன் காமராஜர் இருக்கும் பல புகைப்படங்கள் கிடைத்தன. ஆனால் இந்த படம் மட்டும் அதில் இல்லை. மேலும், லால் பகதூர் சாஸ்திரி சற்று உயரம் குறைவானவர். இந்த படத்தில் உள்ளவர் லால் பகதூர் சாஸ்திரி போல இல்லை. 

எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, படத்தில் இருப்பது 1949 முதல் 52ம் ஆண்டு வரை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த ஆர்.ஆர்.திவாகர் (Ranganath Ramachandra Diwakar) என்பது தெரியவந்தது. 

அசல் பதிவைக் காண: indiainfoline.com I Archive

அடுத்ததாக லால் பகதூர் சாஸ்திரி இறந்த 1966ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதிக்கு முன்பாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்ததா என்று ஆய்வு செய்தோம். நாடாளுமன்ற மக்களவை இணைய நூலகத்தில் ஆய்வு செய்தோம். அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து நாடாளுமன்ற கூட்டங்கள் நடந்தது என்றும், அது தொடர்பான விவாத விவரங்கள் உள்ளதாகவும் தகவல் கிடைத்தது. ஜனவரியில் நாடாளுமன்ற கூட்டம் நடந்ததாக எந்த பதிவும் இல்லை.

அசல் பதிவைக் காண: britannica.com I Archive

அடுத்ததாக 1966ம் ஆண்டு காமராஜர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாரா என்று ஆய்வு செய்தோம். காமராஜர் 1963ம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு 1967ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பிறகு 1969ல் நடந்த நாகர்கோவில் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆனார் என்று அவரது வாழ்க்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive I thehindu.com I Archive 2

அவர் எம்.பி ஆவதற்கு முன்பே இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதனால் அவர் டெல்லியில் தங்கியிருந்தார். “1966ம் ஆண்டு பசுவதைக்கு எதிரான சட்டம் கொண்டு வர சங்பரிவார் அமைப்புகள் கோரிக்கைவிடுத்தன. ஆனால் இதை இந்திராகாந்தி ஏற்கவில்லை. இதனால் 1966ம் ஆண்டு நம்பர் 7ம் தேதி சாதுக்கள் உள்ளிட்ட இந்து அமைப்பினர் டெல்லியில் திரண்டனர். நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற அவர்கள், நாடாளுமன்ற கட்டிடம் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அங்கிருந்த அரசு அலுவலகங்களைத் தாக்கினர். காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜர் வீட்டின் மீதும் கல் வீசி தாக்கினர், பிறகு வீட்டுக்கு தீ வைத்தனர்” என்று செய்திகள் கிடைத்தன. 

இதன் மூலம் 1966ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காமராஜர் பேசினார் என்ற தகவல் தவறானது, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளவர் லால் பகதூர் சாஸ்திரி இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1966ம் ஆண்டு காமராஜர் எம்.எல்.ஏ-வாக இருந்தார். 1969ல் தான் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் 1966ம் ஆண்டு பசு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி ஜன சங்கம் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு காமராஜர் பதிலடி கொடுத்தார் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

1966ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பசு பாதுகாப்பு தொடர்பாக ஜன சங்க உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு காமராஜர் பதிலடி கொடுத்தார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:1966ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பசு பாதுகாப்பு பற்றி காமராஜர் பேசினாரா?

Fact Check By: CHendur Pandian 

Result: Partly False