FACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா?- விளக்கம் அளித்த பிறகும் பரவும் வீடியோ
தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
மருத்துவர்களுக்கு தடுப்பூசி போடுவது போன்ற பாலிமர் டிவி வெளியிட்ட செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. செவிலியர் ஊசியை அழுத்தாமல், போடுவது போல போஸ் கொடுக்கிறார். போட்டு முடித்தது போல வெற்றி சின்னத்தைக் காட்டியபடி பெண் ஒருவர் எழுந்திருக்கிறார். பிறகு வயதானவருக்கு தடுப்பூசி போடப்படுவது போல் நாடகம் நடக்கிறது.
செய்தியில், கர்நாடக மாநிலம் தும்கூரில் தடுப்பூசி போட்டுக்கொள்வது போல பொய்யா படம் பிடித்துக்கொண்ட மாவட்ட நல்வாழ்வு அதிகாரி, செவிலியர், கல்லூரி முதல்வர் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது என்றனர்.
இந்த வீடியோவை Vadivel Munusamy என்பவர் 2021 ஜனவரி 21 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கர்நாடக மாநிலம் தும்கூரில் மாவட்ட நல்வாழ்வு அதிகாரி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு தடுப்பூசி போட்ட காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இதை எல்லா ஊடகங்களும் பரபரப்பு செய்தியாக வெளியிட்டன. அப்படி பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவை பலரும் டவுன்லோட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில், அவர்கள் இருவரும் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் என்றும், தடுப்பூசி போடும்போது அங்கு பத்திரிகையாளர்கள் இல்லை என்றும், பத்திரிகையாளர்கள் வந்து ஊசி போட்டுக்கொள்வது போல, போஸ் கொடுக்கும்படி கேட்கவே, அவர்கள் இருவரும் போஸ் கொடுத்தார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து முன்னணி ஊடகங்கள் தங்கள் பழைய செய்தியை அகற்றிவிட்டன.
பாலிமர் செய்தி ஊடகத்தில் இந்த வீடியோ உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அதில் அப்படி வீடியோ இல்லை. ஆனால், பாலிமர் செய்தி இணையதளத்தில் அந்த செய்தி மட்டும் இருந்தது. அதன் பிறகு அதிகாரிகள் அளித்த விளக்கத்தையும் அவர்கள் தனி செய்தியாக வெளியிட்டிருந்தனர். பலரும் இது குறித்து தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரவே இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.
முதலில் தும்கூரு செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் ரஜினி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் என்று அனைத்து கூடகங்களும் செய்தி வெளியிடவே இது தொடர்பாக தேடினோம். அப்போது கர்நாடக மாநில சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் டாக்டர் ரஜினி அளித்த விளக்க வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
அதில், "தான் 16ம் தேதியே தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நான் தடுப்பூசி போட்ட பிறகு ஊடகத் துறையினர் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்று காட்சி வேண்டும் என்றனர். அதனால், அவர்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்று காட்சி உருவாக்கப்பட்டது. இதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் தவறாக பரப்பி வருகின்றனர். நல்ல தகவலை பரப்புங்கள். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள். இதுபோன்று தவறான தகவலை பரப்ப வேண்டாம்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவு டாக்டர் ரஜினியைத் தொடர்புகொண்டு விசாரித்த போது, தான் தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான சில ஆதாரங்களையும் வழங்கியிருந்தார்.
ஊசி போட்டுக்கொண்ட மற்றொருவர் மாவட்ட நல்வாழ்வு அதிகாரி நாகேந்திரப்பா ஆவார். அவரும் தான் ஊசி போட்டுக்கொண்டேன். மீடியா நபர்கள் கேட்டுக்கொண்டதால் மீண்டும் ஊசி போட்டுக்கொள்வது போல் போஸ் கொடுத்தேன் என்று கூறியுள்ளார். தும்கூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் இந்த தகவலை உறுதி செய்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.
நியூஸ் மினிட் என்ற ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில், "தாங்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் ஊசி போட்டுக்கொள்வது போல அவர்கள் போஸ் கொடுத்தார்கள்" என்று உள்ளூர் கேபிள் டிவி நிருபர்கள் கூறியதாக உள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கர்நாடகாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் மருத்துவர்கள் ஏமாற்றினார்கள் என பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது போல் டாக்டர்கள் நடித்தார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா?- விளக்கம் அளித்த பிறகும் பரவும் வீடியோ
Fact Check By: Chendur PandianResult: False