கடற்கரையில் கஞ்சா காய வைத்துத் தூங்கிய நபர்… தமிழ்நாட்டில் நடந்ததா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

விடியல் ஆட்சியில் கடற்கரையில் கஞ்சாவை காயவைத்துத் தூங்கிய நபர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive

இணைய ஊடகம் வெளியிட்டிருந்த வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். “‘பயமே இல்லாம போச்சு’..😡 கஞ்சாவை கடற்கரையில் காய வைத்த நபர்..! அசந்து தூங்கிய போது Twist” என்று அதில் இருந்தது. நிலைத் தகவலில், “அமைச்சர் மாசு கஞ்சாவை ஒளித்து விட்டோம் என்று சொல்லி கூட இவ்வளவு வெளிப்படையாக வைத்திருப்பது அவருக்கு செய்யும் துரோகம் அல்லவா உடன்பிறப்பே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மற்றொரு ஃபேஸ்புக் பதிவில் இணைய ஊடகத்தின் வீடியோவும் வெளியாகி இருந்தது. நிலைத் தகவலில், “கஞ்சாவை வெயில் காய(உலர) வைத்துக்கொண்டு உறங்கிய இளைஞன் 🙄 திராவிட மாடல் ஆட்சியின் சாதனை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் கடற்கரையில் கஞ்சாவை காய வைத்துவிட்டு அசந்து தூங்கிய நபர் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக தேடிய போது இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்ததாக தகவல் நமக்குக் கிடைத்தன. ஆனால், தமிழ்நாட்டில் நடந்தது போன்று பலரும் பதிவிட்டு வரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் இணைய ஊடகம் வெளியிட்டிருந்த வீடியோ பதிவை பார்த்தோம். சம்பவம் எங்கு நடந்தது என்று அந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை. இதனால், வதந்தி பரப்புகிறவர்களுக்கு வசதியாக போய்விட்டது. வீடியோவை பார்த்தோம். 45வது விநாடியில் இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் நடந்தது என்று குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது இல்லை என்பது உறுதியாகிறது.

இது தொடர்பாக மலையாள ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தேடி எடுத்தோம். அதில், “கஞ்சா போதையில் 370 கிராம் அளவுள்ள கஞ்சாவை கடற்கரையில் காய வைத்துவிட்டு, அருகில் படுத்துத் தூங்கிய நபர். கடற்கரைக்கு வந்தவர்கள் இந்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் கஞ்சாவை காய வைத்து தூங்கிய நபரை கோழிக்கோடு போலீசார் கைது செய்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: kairalinewsonline.com I Archive

கேரள ஊடகங்கள் மட்டுமின்றி பிடிஐ உள்ளிட்ட செய்தி நிறுவனம், தேசிய ஊடகங்கள் கூட இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. கேரளாவில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில், தி.மு.க-வினர் செய்தது போன்று விஷமத்தனமாக தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது உறுதியாகிறது.இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கேரளாவில் ஒருவர் கஞ்சாவை கடற்கரையில் காய வைத்த வீடியோவை தமிழ்நாட்டில் நடந்தது போன்று தவறாக சமூக ஊடகஙக்ளில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கடற்கரையில் கஞ்சா காய வைத்துத் தூங்கிய நபர்… தமிழ்நாட்டில் நடந்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False