பிரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தினமலர் வெளியிட்டது போன்று குஷ்பு புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்னைப் பற்றி பேசிய வீடியோ வைரலானது போல் ப்ரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ ஆதாரங்கள் வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை Jero Victor என்ற ஃபேஸ்புக் ஐடியைக் கொண்டவர் 2023 ஜூன் 19ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

நடிகை குஷ்புவை மிகக் கடுமையாக, ஆபாசமாக விமர்சித்ததாகச் சமீபத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார். போலீசார் அவரை கைதும் செய்தனர். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சு சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் பேசியது வைரல் ஆனது போன்று, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ப்ரிஜ் பூஷன் சிங்கின் வீடியோக்களும் வைரல் ஆனால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Archive

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போது போலியானது போல் இருந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம். முதலில் குஷ்பு இப்படி ஏதும் கருத்து தெரிவித்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அடுத்து குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதில், தி,மு.க-வினர் இந்த போலி நியூஸ் கார்டுகளை பகிர்ந்து வருவதாக குஷ்பு பதிவிட்டிருந்தது கிடைத்தது. இதன் மூலம் இந்த தகவல் தவறானது என்பது உறுதியானது.

இந்த நியூஸ் கார்டை தினமலர் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள ஆய்வைத் தொடர்ந்தோம். தினமலர் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்ட போது, இது போலியான நியூஸ் கார்டு என்று முத்திரையுடன் தினமலர் வெளியிட்டிருந்த பதிவு கிடைத்தது. அதில், "தினமலர் பெயரில் குஷ்பு சொன்னதாக சமூகவலைத்தளங்களில் பரவும் போலி பதிவு" என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.

முடிவு:

பிரிஜ் பூஷன் சிங்கின் பாலியல் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரல் ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குஷ்பு கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிரிஜ் பூஷனின் பாலியல் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டால் நடவடிக்கை என்று குஷ்பு கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False