ஸ்டாலின் பிரதமர் ஆன பிறகு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிப்போம் என்று கே.என்.நேரு கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் ஆன பிறகு வேண்டுமானால் சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அமைச்சர் சர்ச்சை கருத்து. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இது சரியான தருணம் அல்ல. தளபதி பிரதமர் ஆனா பிறகு வேண்டுமானால் முயற்சி செய்கிறோம் அமைச்சர் கே.என் நேரு” என்று இருந்தது.

இந்த பதிவை வயலாமூர் கார்த்திக் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 14ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், புதிய புதிய அறிவிப்புகள் வெளியிடுவது கட்சிகளின் வழக்கம். இந்த நேரத்தில் யாரும் எதிர்மறையான கருத்துக்களைக் கூற மாட்டார்கள். அதுவும் தான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினே அறிவித்துள்ள நிலையில், அதை எல்லாம் செய்ய முடியாது என்று அமைச்சர் கூறினார் என்று பரவும் தகவல் நம்பும் வகையில் இல்லை.

இந்த நியூஸ் கார்டு பிப்ரவரி 12, 2022 அன்று வெளியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தேதி அமைச்சர் நேரு இப்படிக் கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. உண்மையில் அமைச்சர் அப்படிக் கூறியிருந்தால் எல்லா ஊடகங்களிலும் அது தொடர்பான செய்தி வந்திருக்கும், வீடியோக்கள் ஃபேஸ்புக், யூடியூபில் வைரல் ஆகியிருக்கும். ஆனால் நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட், டிசைன் என எதுவும் தந்தி டிவி வழக்கமாகப் பயன்படுத்தும் நியூஸ் கார்டுடன் ஒத்துப்போகவில்லை. மேலும், “பிரதமர் ஆன பிறகு” என்று சொல்வதற்குப் பதில் “பிரதமர் ஆனா பிறகு” என்று பிழையாக இருந்தது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என உறுதி செய்தன.

எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய, தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் கே.என்.நேரு புகைப்படத்துடன் எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு இது பற்றிக் கேட்டோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானதுதான் என்று உறுதி செய்தார். 

இதன் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆன பிறகு வேண்டுமானால் சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று கேஎன் நேரு கூறியதாக பரவும் நியூஸ் கார்டு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஸ்டாலின் பிரதமர் ஆன பிறகு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிப்போம் என்று கே.என்.நேரு கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False