உண்மையான தொண்டர்கள் யாரும் காரில் அ.தி.மு.க கொடியைக் கட்டமாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் போலியான நியூஸ் கார்டு.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அமைச்சர் ஜெயக்குமார் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், "உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் காரில் அதிமுக கொடியைக் கட்ட மாட்டார்கள் - அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Shali Mary என்பவர் 2021 பிப்ரவரி 8ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலை ஆன சசிகலா தமிழகம் வந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய காரில் அ.தி.மு.க கொடியை சசிகலா கட்டியிருப்பதற்கு அ.தி.மு.க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தும் வந்தார்.

Archive

இந்த நிலையில் உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் காரில் அ.தி.மு.க கொடியைக் கட்டமாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ் கார்டு பரவி வருகிறது. பலரும் "அமைச்சர் பதற்றத்தில் உளறுகிறார்" என்று கமெண்ட் செய்து வருவதைக் காண முடிந்தது. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அந்த நியூஸ் கார்டை பார்க்கும்போது அசல் போலத் தெரியவில்லை. வழக்கமாக நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் இல்லை. "மாட்டார்கள்" என்பது மாட்டாரர்கள் என்று தவறாக உள்ளது. ஜெயக்குமார் படம் தனியாக வைக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில், நியூஸ் 7 தமிழ் 2021 பிப்ரவரி 7ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது, ஜெயக்குமார் பேச்சு தொடர்பாக ஒரே ஒரு நியூஸ் கார்டு இருந்தது. அதில், “சசிகலா வருகையால் டிடிவி தினகரன் பதற்றத்தில் உள்ளார். அதிமுகவில் சேர்க்கமாட்டோம் என முடிவெடுத்த பிறகு எங்களுக்கு பதற்றமில்லை! அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி” என்று இருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது போன்று வேறு எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்புகொண்டு கேட்டோம். அவர், இந்த நியூஸ் கார்டு போலியானது என்றார்.

ஒரு வேளை அமைச்சர் இப்படி ஏதும் பேட்டி அளித்துள்ளாரா என்று தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டோம். அவர் தரப்பில் பேசியவர்கள், அமைச்சர் ஜெயக்குமார் இப்படி பேசவில்லை. இது தவறான தகவல், என்று உறுதி செய்தனர்.

இதன் அடிப்படையில், உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் காரில் அதிமுக கொடியைக் கட்டமாட்டார்கள் என ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உண்மையான அதிமுக தொண்டர்கள் கட்சிக் கொடியை காரில் கட்டமாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:உண்மையான அதிமுக தொண்டர்கள் கட்சிக் கொடியை காரில் கட்ட மாட்டார்கள் என்று ஜெயக்குமார் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False