மோடி ஆவணப் படம்; பிபிசி-யை கண்டித்து லண்டனில் மக்கள் போராட்டம் நடத்தினார்களா?

அரசியல் இந்தியா சர்வதேசம்

இந்தியப் பிரதமர் மோடி தொடர்பாக ஆவணப் படத்தை வெளியிட்ட பிபிசி-யை கண்டித்து லண்டனில் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பொது மக்கள் பிபிசி-க்கு எதிராக போராட்டம் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. “ஷேம் ஆன் யூ” என்று கோஷம் எழுப்புகின்றனர். பெரிய திரையில் தோன்றும் பெண்மணி, “பிபிசி தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது” என்று கூறிவிட்டு பிபிசி-க்கு எதிராக கோஷங்களை எழுப்புகிறார். 

நிலைத் தகவலில், “லண்டனில் பொதுமக்களே தெருவுக்கு வந்து பிபிசி’யை காறி உமிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

*பாரத பிரதமர்* திரு *மோடி* யை பற்றி மிகக் காழ்ப்புணர்ச்சியுடன் பகிரப்பட்ட நிகழ்ச்சியை UK மக்களே நிராகரித்து விட்டனர்… ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை தகவல்தொழில்நுட்பம் &சோசியல் மீடியா தூத்துக்குடி தெற்கு மாவட்டம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி 27ம் தேதி பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குஜராத் கலவரத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் பங்கு தொடர்பாக பிபிசி ஆவணப் படம் வெளியிட்டுள்ளது. அந்த ஆவணப் படத்திற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பா.ஜ.க-வினர் இந்த ஆவணப் படத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். எதிர்க்கட்சியினரோ இந்த ஆவணப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் வேலையை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் லண்டனில் பிபிசி அலுவலகத்திற்கு அருகில், மோடிக்கு எதிராக ஆவணப் படம் வெளியிட்ட பிபிசி-யைக் கண்டித்து பொது மக்களே போராட்டம் நடத்தினர் என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அப்படி ஏதும் நடந்ததா என்று அறிய ஆய்வு செய்தோம். கூகுளில் பிரதமர் மோடி, ஆவணப் படம், பிபிசி, போராட்டம் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். 

Archive

அப்போது  இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் ஜனவரி 29, 2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று பிபிசி-க்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருப்பது தெரிந்தது. அதே நேரத்தில் மோடி ஆவணப் படம் தொடர்பாக லண்டன் பிபிசி அலுவலகம் அருகே போராட்டம் நடந்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆவணப் படம் விவகாரம் தொடர்பாக இன்னும் போராட்டமே நடைபெறாத நிலையில் இந்த வீடியோ பழைய வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

எனவே, இந்த வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, கோவிட் தொடர்பான உண்மைகளை மறைத்ததாகக் கூறி பிபிசி-க்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தினர் என்று சில பதிவுகள் கிடைத்தன. அதன் அடிப்படையில் தொடர்ந்து தேடிய போது கோவிட் – கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் இந்த போராட்டத்தை நடத்தியதாகத் தெரிந்தது. ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்களின் சமூக ஊடக பக்கங்களில் இந்த வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. சில இங்கிலாந்து ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் Oracle Films என்று லோகோ உள்ளது. அதன் ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ இருந்தது. அதில், “SHAME ON YOU” – British public to the BBC. Truth be Told London, a demonstration outside BBC Broadcasting House, Portland Place, London on 21st Jan 2023″ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

Archive

பிரதமர் மோடி தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்ட பிபிசி-யை கண்டித்து இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் சார்பில் ஜனவரி 29, 2023 அன்றுதான் போராட்டமே நடைபெற உள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி தொடர்பான ஆவணப் படத்தை எதிர்த்து லண்டனில் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள் என்ற தகவல் தவறானது என்று உறுதியானது.

முடிவு:

லண்டனில் உள்ள பிபிசி தலைமையகத்திற்கு முன்பு கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய போராட்டத்தின் வீடியோவை எடுத்து, மோடி ஆவணப் படத்துக்கு எதிராக லண்டன் மக்கள் போராடினார்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோடி ஆவணப் படம்; பிபிசி-யை கண்டித்து லண்டனில் மக்கள் போராட்டம் நடத்தினார்களா?

Fact Check By: Chendur Pandian 

Result: False