
டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்தியதைக் கண்டித்து, மோடி பதவி விலக வலியுறுத்தி லண்டனில் போராட்டம் நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மோடி பதவி விலக வேண்டும் என்று கோரி லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஐடி ரெய்டு விட்டா
உடனே பயந்துட்டு அம்மாஞ்சியா இருக்க BBC என்ன தயிர் சாத இந்தியா ஊடகம்னன்னு நினைச்சிங்கடா சங்கிகளா…
லண்டன் தேம்ஸ் நதிக்கரையில்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை Diwa என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 14ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பையில் இயங்கி வரும் பிபிசி ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப் படத்தை பிபிசி வெளியிட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்த சூழலில், பிபிசி அலுவலகத்தில் ஆய்வு நடத்தியதற்காகப் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று லண்டனில் ஆர்ப்பாட்டம் நடந்தது என்று பலரும் ஒரு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
எதற்காக இந்த போராட்டம் நடந்தது, பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வுக்குப் பிறகு இந்த போராட்டம் நடந்ததா என்று ஆய்வு செய்தோம். வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை ஊடகவியலாளர் ஒருவர் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவிட்டிருப்பது தெரிந்தது. அதில், நாட்டின் மதச்சார்பற்ற அரசியலமைப்பு சிதைந்து கிடப்பதைக் கண்டித்து மோடி பதவி விலக வலியுறுத்தி இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள் லண்டனில் போராட்டம் நடத்தினர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, 2021 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தி இந்து நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்களில் இந்த வீடியோ தொடர்பாக வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன.
“இந்தியாவில் இஸ்லாமியர், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள் உள்ளிட்ட பல சமூகத்தினர் மீது அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. அரசின் தவறான செயல்பாடு காரணமாக கொரோனாவில் ஏராளமானோர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். இந்த அநீதிக்கு மோடிதான் பொறுப்பு என்பதால் அவரை பதவி விலகக் கோருகிறோம்” என்று போராட்டக்காரர்கள் கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive 1 I caravanmagazine.in I Archive 2
இந்தியாவில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு நடந்தது 2023 பிப்ரவரியில். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2021 ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வைக் கண்டித்து பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி லண்டனில் ஆர்ப்பாட்டம் நடந்தது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை ஆய்வை கண்டித்து மோடி பதவி விலக வலியுறுத்தி லண்டனில் ஆர்ப்பாட்டம் நடந்தது என்று பரவும் வீடியோ 2021ல் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு நடத்தியதைக் கண்டித்து லண்டனில் போராட்டம் நடந்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
