
“மிரட்டிய உடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
ரஜினி படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் “மன்னிப்பு கேட்க முடியாது ரஜினிகாந்த் அதிரடி! மிரட்டிய உடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது. சாவர்க்கரை போல் ஈனப் பிழைப்பு பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவை Irshath Ahamed என்பவர் 2020 ஜனவரி 24ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத்தகவல் “இவன் சங்கிலயே வித்தியாசமான சங்கியா இருக்கான்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தந்தை பெரியார் பற்றி துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினி பேசியது போன்று அந்த சம்பவம் நடைபெறவில்லை. எனவே, ரஜினிகாந்த் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். இந்த சூழ்நிலையில் தன்னுடைய வீட்டு வாசலில் திரண்டிருந்த பத்திரிகையாளர்களுக்கு கடந்த 21ம் தேதி ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அப்போது, “தான் பேசியது சரிதான். கற்பனையாக எதையும் கூறவில்லை. எனவே மன்னிப்பு கேட்க முடியாது” என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்த சூழலில் “மிரட்டியதுடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது” என்று ரஜினிகாந்த் கூறியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். இந்த நியூஸ் கார்டு பார்க்கும்போது அசல் போலத் தெரிந்தாலும் தமிழ் ஃபாண்ட், டிசைனில் வேறுபாடு தெரிந்தது. மேலும், “மன்னிப்பு கேட்க முடியாது ரஜினிகாந்த் அதிரடி! மிரட்டிய உடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது. சாவர்க்கரை போல் ஈனப் பிழைப்பு பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” பகுதி மட்டும் தனியாக சேர்த்திருப்பது தெரிகிறது.
உண்மையில் இந்த நியூஸ் கார்டை நியூஸ்7 தமிழ் வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம். இந்த படத்தை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பிவைத்துவிட்டு, நியூஸ்7 தமிழ் ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்று அதில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம் அப்போது கடந்த ஜனவரி 21-ம் தேதி ரஜினிகாந்த் பேட்டி தொடர்பாக வெளியான நியூஸ் கார்டு கிடைத்தது. அதில், “துக்ளக் விழாவில் பெரியார் குறித்து இல்லாததை சொல்லவில்லை; நடந்தவை தான் கூறினேன். துக்ளக் விழாவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று ரஜினிகாந்த் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தனர்.
Archived Link |
இதன் மூலம் நியூஸ் 7 தமிழின் இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதியானது. இதற்குள்ளாக, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நியூஸ் 7 தமிழ் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகி நம்மிடம் கூறினார்.
ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பேட்டியில் சாவர்க்கர் போல மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறினாரா… அதன் அடிப்படையில் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்தோம். ரஜினிகாந்த் பேட்டி தொடர்பான வீடியோவை யூடியூபில் தேடினோம். “மன்னிப்பு கேட்க முடியாது ரஜினி” என்று டைப் செய்து தேடியபோது பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட ரஜினியின் பேட்டி முழு வீடியோ நமக்கு கிடைத்தது. அதில் எந்த இடத்திலும் ரஜினி சாவர்க்கர் போல மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறவில்லை. “தான் பேசியது சரி. அதனால், சாரி மன்னிப்பு கேட்க முடியாது” என்று மட்டுமே அவர் கூறுகின்றார்.
Archived link |
நம்முடைய ஆய்வில்,
ரஜினிகாந்த் பேட்டி தொடர்பான நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு கிடைத்துள்ளது.
ரஜினிகாந்த் முழு பேட்டி வீடியோ கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “மன்னிப்பு கேட்க முடியாது ரஜினிகாந்த் அதிரடி! மிரட்டிய உடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது. சாவர்க்கரை போல் ஈனப் பிழைப்பு பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று ரஜினிகாந்த் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் கிடையாது என்று ரஜினி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
