பட்டப்பகலில் சங்கிலி பறிப்பு என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்ததா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

பட்டப்பகலில் சர்வ சாதாரணமாகச் சங்கிலி பறிப்பு நடக்கிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து சங்கிலியை பறித்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடக்கும் சங்கிலி பறிப்புகள்…🤭

பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது…!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சாலையில் சர்வ சாதாரணமாக சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெறுவதால் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சமூக பொறுப்புடன் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று குறிப்பிடப்படவில்லை. இதனால், தமிழ்நாட்டில் நடந்தது போன்று கமெண்ட் பகுதியில் பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே, இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை பலரும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது. ஆனால், யாரும் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று குறிப்பிடாமலே பதிவிட்டிருந்தனர். இவற்றுக்கு இடையே chhatrapati_sambhajinagar_news என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தனர். 

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive

இந்தியில் இருந்த பதிவை கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அப்போது அந்த பதிவு மராத்தி மொழியில் வெளியாகி இருப்பது தெரிந்தது. மேலும் அதில் உள்ளதை படித்து பார்க்கும் போது, இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் என்று அழைக்கப்பட்ட சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில் கல்டா கார்னர் (Kalda Corner) என்ற இடத்தில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சத்ரபதி சாம்பாஜிநகரின் உஸ்மான்புரா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவல் அடிப்படையில் வேறு செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இதனால் உஸ்மான்புரா காவல் நிலையத்திற்குட்பட்ட கல்டா கார்னர் என்ற பகுதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள பகுதி உள்ளதா என்று அறிய கூகுள் மேப் ஸ்ட்ரீட் வீயூவை பார்த்தோம்.

Google Map

அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் பகுதியைக் கண்டறிய முடிந்தது. ஒரு வீட்டின் முன்பு மாட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் இந்த வீடியோ பதிவாகியிருந்தது. இந்த வீட்டின் வளைந்த வடிவமைப்புடன் கூடிய மதில் சுவர், வீட்டுக்கு எதிரே உள்ள மதில் சுவர் மற்றும் அங்கிருந்த கார் உள்பட பலவும் கூகுள் ஸ்ட்ரீட் வியூவுடன் ஒத்துப்போனது. இதன் மூலம் இந்த இடம் மகாராஷ்டிராவில் உள்ளதுதான் என்பது உறுதியானது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் என்று அழைக்கப்பட்ட சத்ரபதி சாம்பாஜிநகரில் பதிவானது என்பது உறுதியானது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது என்று குறிப்பிடவில்லை. ஆனால், எங்கு நடந்தது என்று குறிப்பிடாத காரணத்தால் தமிழ்நாட்டில் நடந்தது போன்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் நம்முடைய தேடலில் இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் முழுமையான தகவல் இல்லாததால் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

முடிவு:

சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக பரவும் வீடியோ மகாராஷ்டிராவைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பட்டப்பகலில் சங்கிலி பறிப்பு என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்ததா?

Written By: Chendur Pandian  

Result: Missing Context

Leave a Reply