தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை; துரைமுருகன் அலட்டல் பேச்சு உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தேர்தல் வாக்குறிதிகளை நிறைவேற்ற முடியாமல் போகிற போது மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆட்சியை பிடித்த பிறகு வாக்குறிதிகளை நிறைவேற்ற சொல்லி உதயநிதியை பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை – அமைச்சர் துரைமுருகன்” என்று இருந்தது.

இந்த பதிவை Paul Selvan Thanga Nadar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 18ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தந்தி டிவி வெளியிட்டதாக பல்வேறு போலியான நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட சூழலில் தி.மு.க-வினர் கூறாததை போலியான நியூஸ் கார்டு மூலம் எதிர் தரப்பினர் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் நேரு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டது. பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியதாக வதந்திகள் பரப்பப்பட்டன. தற்போது வாக்குறுகதிகளை  நிறைவேற்ற முடியாமல் போகிற போது மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தி.மு.க பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் கூறியதாக நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த நியூஸ் கார்டின் வடிவமைப்பு, தமிழ் ஃபாண்ட் போன்றவை இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன. மேலும், “வாக்குறுதி” என்பதை “வாக்குறிதி” என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எழுத்துப்பிழைகள் ஏற்படுவது வாடிக்கைதான். ஆனால் வாக்குறிதி என்று இரண்டு இடங்களில் தவறாக இருந்தது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய, தந்தி டிவி கடந்த பிப்ரவரி 11, 2022 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் துரைமுருகன் தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. இதனால், போலியாக இந்த நியூஸ் கார்டை உருவாக்கியிருப்பது தெளிவானது. இதை உறுதி செய்ய தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார். 

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாது என்று துரைமுருகன் எங்காவது கூறினாரா, அது தொடர்பான செய்தி கிடைக்கிறதா என்று பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். அதிலும் அப்படி எந்த ஒரு கருத்தை கூறியதாக இல்லை. உண்மையில் துரைமுருகன் அவ்வாறு கூறியிருந்தால் எல்லா ஊடகங்களிலும் வெளியாகி இருக்கும். குறைந்தபட்சம் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் மற்றும் அவர்களது ஆதரவு ஊடகங்களிலாவது வந்திருக்கும். அப்படி எதுவும் கிடைக்கவில்லை. 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போகிற போது மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று துரைமுருகன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால் பொது மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை; துரைமுருகன் அலட்டல் பேச்சு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False