
ஜெயலலிதாவை முட்டியதால் குட்டி யானை ஒரே வாரத்தில் கொல்லப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குட்டி யானை முட்டும் புகைப்படம் மற்றும் குட்டி யானை ஒன்று இறந்து கிடக்கும் புகைப்படங்கள் ஒன்றாக சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “ஒரு வாயில்லா ஜீவன், அதுக்கு 5 அறிவு தான். ஏதோ தெரியாம ஜெயலலிதா மேல மோதிடுச்சி.
அந்த ஒரே காரணத்துக்காக அடுத்த ஒரே வாரத்துல அந்த யானை கொல்லப்பட்டது. ஜெயலலிதா கூட்டத்துல யாராவது கேள்வி கேட்டிருந்தா அவங்க நிலைமையும் இது தான். எங்களுக்கு வந்து பாடம் எடுக்காதிங்கடா…
இதுக்கு பரிகாரமா தான் யானைகள் புத்துணர்ச்சி முகாம் எல்லாம் எவனோ ஜோசியகாரன் சொன்னான் பண்ணிட்டு இருந்துச்சு“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Vijay Chetpet என்பவர் 2021 ஜனவரி 3ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜெயலலிதா இறந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் ஜெயலலிதாவை குட்டி யானை முட்டிய பழைய சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளனர். ஜெயலலிதாவை குட்டி யானை முட்டியது உண்மைதான். அப்போது அது பற்றி பல விதமாக வதந்திகள் பரவின. ஆனால், அதற்காக ஒரே வாரத்தில் யானை கொலை செய்யப்பட்டது என்று கூறியிருப்பது அதிர்ச்சியாக இருந்தது. இந்த தகவல் உண்மையா என்று சரி பார்த்தோம்.
ஜெயலலிதாவை குட்டி யானை முட்டிய நிகழ்வு எப்போது நடந்தது என்று ஆய்வு செய்தோம். கூகுளில் ஜெயலலிதா, குட்டி யானை உள்ளிட்ட பல கீ வார்த்தைகளை வைத்துத் தேடினோம். அப்போது, “முதல்வர் ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை மரணம்!” என்று தலைப்பிடப்பட்ட 2014ம் ஆண்டு வெளியான விகடன் செய்தி ஒன்று கிடைத்தது.

அசல் பதிவைக் காண: vikatan.comI Archive
அதில், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதுமலை யானைகள் முகாமில் வளர்ந்து வந்த 6 வயதான குட்டி யானைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காவேரி என பெயர் சூட்டினார். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் ஜெயலலிதா முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிடச் சென்றார்.
அப்போது குட்டி யானை காவேரி முதல்வருக்கு வரவேற்பு அளித்தது. அதன் பின்னர் சிறிது நேரத்தில், அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போன காவேரி முதல்வர் ஜெயலலிதாவை தனது துதிக்கையால் இடித்துத் தள்ளியது.
இந்நிலையில், சமீப நாட்களாக குட்டி யானை காவேரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலளனிக்காமல் அந்த யானை இன்று (4ஆம் தேதி) உயிரிழந்தது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: deccanchronicle.com I Archive
டெக்கான் கிரானிக்கிள் வெளியிட்டிருந்த செய்தியில் யானை இறந்து கிடக்கும் படம் பகிரப்பட்டிருந்தது. அதிலும் யானை 2014 ஆகஸ்ட் 4ம் தேதி இறந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் யானைக்கு திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டது என்றும், இதனால் அது உயிரிழந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் யானை உடல் நலக் குறைவால் உயிரிழந்திருப்பது உறுதியானது.
ஜெயலலிதாவை யானை முட்டியபோது வெளியான செய்திகளை தேடினோம். அப்போது, என்டிடிவி வெளியிட்ட செய்தி கிடைத்தது. 2013 ஜூலை 31ம் தேதி வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், “முதுமலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30ம் தேதி) யானைகளுக்கு ஜெயலலிதா பழங்கள் வழங்கினார். அப்போது குட்டி யானை ஒன்று ஜெயலலிதாவை முட்டியது. நல்ல வேலையாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: ndtv.com I Archive
இதன் மூலம் ஜெயலலிதாவை யானை முட்டிய சம்பவம் நடந்த அந்த வாரத்திலேயே யானை இறக்கவில்லை. ஒரு வருடம் கழித்து உடல் நலக் குறைவு காரணமாக யானை உயிரிழந்திருப்பது உறுதியாகிறது.
நம்முடைய ஆய்வில், ஜெயலலிதாவை யானை முட்டிய சம்பவம் நடந்தது 2013 ஜூலை 30ம் தேதி என்பதும், யானை இறந்தது 2014 ஆகஸ்ட் 3 என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஜெயலலிதாவை முட்டியதால் ஒரே வாரத்தில் யானை குட்டி கொல்லப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை ஒரே வாரத்தில் கொல்லப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை ஒரே வாரத்தில் கொல்லப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
