
‘’பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம்- பாஜக தலைவர் எல்.முருகன்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில், பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் – பாஜக தலைவர் எல்.முருகன்,’’ என எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்ற தேர்தல் 2021 நெருங்கி வருகிறது. இதையொட்டி, தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆனால், இந்த நியூஸ் கார்டில், பாஜக ஆட்சிக்கு வந்தால் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பார்த்தால், மத்தியிலா, மாநிலத்திலா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
03.01.2021 தேதியிட்டு பகிரப்பட்டுள்ள இந்த புதிய தலைமுறை நியூஸ் கார்டு உண்மையா என்று அவர்களது ஆசிரியர்கள் குழுவில் விசாரித்தோம். ‘’இப்படி நாங்கள் எதுவும் செய்தி வெளியிடவில்லை,’’ என்று கூறி மறுப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, புதிய தலைமுறை அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று 03.01.2020 தேதியில் எல்.முருகன் பற்றி எதுவும் செய்தி வெளியிட்டனரா என விவரம் தேடினோம். அப்போது, அசல் நியூஸ் கார்டு கிடைத்தது.

எனவே, எல்.முருகன் பற்றி புதிய தலைமுறை வெளியிட்ட வேறொரு நியூஸ் கார்டை எடுத்து, அதில், தங்களது சொந்த கருத்தை சேர்த்து, எடிட் செய்து, சமூக வலைதளங்களில் அவரது எதிர் தரப்பினர் பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று எல்.முருகன் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered
