
பா.ஜ.க வெற்றி கொண்டாட்டத்தில் இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
BJP யினரின் அசத்தலான வெற்றிக் கொண்டாட்டம்

https://www.facebook.com/jeyakumarhosanna/videos/1438940216246359/
வீடியோவில், பர்தா அணிந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவரை இளைஞர்கள் சுற்றி வளைத்துத் தாக்குகின்றனர். அவரது பர்தாவை இழுத்தும், அவர் மீது மாவை வீசியும் தண்ணீரைக் கொட்டியும், அடித்தும் வரம்பு மீறி செயல்படுகின்றனர். அந்த பெண்ணின் அலறல் சத்தத்துடன் ‘சோர்… சோர்’ என்பது போன்ற சத்தம் கேட்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் அந்த பெண் சுவற்றின் ஓரம் ஒடுங்கி நிற்கிறார். அப்போது ஒருவர் வந்து இளைஞர்களை மிரட்டி விரட்டுகிறார். வீடியோவில் இது எங்கு, எப்போது நடந்தது என்று எந்த ஒரு தகவலும் இல்லை.
இந்த வீடியோவை 2019 மே 25ம் தேதி வெளியிட்ட Jeyakumar Hosanna இது, பா.ஜ.க-வின் வெற்றி கொண்டாட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்த இடத்தில் இது நடந்தது என்று குறிப்பிடவில்லை. தேர்தல் முடிவுக்குப் பிறகு பல இடங்களில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக செய்திகள் வருவதால், இதுவும் உண்மையாக இருக்கும் என்று நம்பி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவைப் பார்க்கும்போது யாரும் இந்தியாவில் உள்ளவர்கள் போலத் தெரியவில்லை. வீடியோ தொடங்கிய சில விநாடிகளில் அரபு ஷேக் ஆடை அணிந்த ஒருவர் செல்வதைக் காண முடிந்தது.

இந்த வீடியோவின் ஒரே ஒரு காட்சியை புகைப்படமாக எடுத்து yandex.com-ல் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ தொடர்பான பல செய்திகள் நமக்கு கிடைத்தன.

2015ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி இந்த வீடியோ யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிந்தது. அதில், மொராக்கோவில் தாக்கப்படும் இஸ்லாமிய பெண் என்று இருந்தது. இது தவிர வேறு எந்த செய்தியும் இல்லை.
தொடர்ந்து தேடியபோது, மொராக்கோவில் இந்த சம்பவம் நடந்தது என்று பலரும் பதிவு செய்திருந்தனர். ஆனால், எதற்காக அந்த பெண்ணை தாக்கினார்கள், தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை.
மற்றொரு செய்தியில், மொராக்கோவில் இன வெறி பிடித்த அரேபிய இஸ்லாமியர்கள், கருப்பு நிற இஸ்லாமிய பெண்ணை தாக்கியதாக கூறப்பட்டு இருந்தது.
நாம் மேற்கொண்ட ஆய்வில், இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், 2015ம் ஆண்டில் இருந்து இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருவது மட்டும் தெரிகிறது. பலரும் இது மொராக்கோ நாட்டில் நடந்தது என்று தெரிவித்துள்ளனர்.
வீடியோவிலேயே ஒருவர் அரபு ஆடை அணிந்து வருவதைக் காண முடிகிறது.
இன வெறி கொண்டு கருப்பு நிற இஸ்லாமியர் தாக்கப்படுவதாக ஒரு செய்தியும் நமக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டில் நடந்த ஒரு நிகழ்வின் வீடியோவை வெளியிட்டு, “இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் எதிரொலியாக சிறுபான்மையினர் மீது பா.ஜ.க-வினர் தாக்குதல் நடத்துகின்றனர்” என்று விஷமப் பிரசாரம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், “பா.ஜ.க-வினரின் அசத்தலான வெற்றி கொண்டாட்டம்” கூறி ஷேர் செய்யப்பட்ட மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பா.ஜ.க வெற்றி கொண்டாட்டத்தில் இஸ்லாமிய பெண் தாக்கப்பட்டாரா?
Fact Check By: Praveen KumarResult: False
