FACT CHECK: கனரா வங்கி முன்பு போராட்டம் நடத்திய பா.ஜ.க என்று பகிரப்படும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

உத்தரப்பிரதேசத்தில் கனடா அரசைக் கண்டித்து கனரா வங்கி முன்பு பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாம கிண்டலுக்கு சொன்னது உண்மையாவே நடந்துருச்சு😂😂😂😂

உத்திரபிரதேசத்தில் கனடா நாட்டு பிரதமரை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜக ஆர்ப்பாட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Syed Ishak என்பவர் News18 Tamil Nadu : என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 டிசம்பர் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

Syed Ishak மட்டுமல்ல பலரும் இதை ஷேர் செய்து வரவே இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

இந்தியாவில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சூழலில் கனடா பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து கனரா வங்கி முன்பு பா.ஜ.க-வினர் போராட்டம் என்று செய்தி பரவி வருகிறது. பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சீனா ராணுவம் படுகொலை செய்த போது சீன அதிபர் உருவ பொம்மையை எரிக்கிறோம் என்று கூறி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் படத்தை எரித்துப் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் பா.ஜ.க-வினர். அதனால், இந்த தகவல் உண்மையாக இருக்கும் என்று நினைத்து பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் படத்தில் கனரா வங்கி முன்பு போராட்டம் நடந்தது போன்று காட்சி இல்லை. எங்கோ எப்போதோ நடந்த போராட்டத்தின் படத்தை எடுத்து பா.ஜ.க-வினரை விமர்சனம் செய்யும் வகையில் இந்த பதிவை வெளியிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தை 2020 ஆகஸ்ட் 30ம் தேதி மாலைமலர் வெளியிட்டிருப்பது நமக்கு கிடைத்தது. 

அசல் பதிவைக் காண: maalaimalar.com I Archive

அதில் இந்த புகைப்படம் ஊட்டியில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 2020 ஆகஸ்ட் மாதம் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பா.ஜ.க கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி பெறவில்லை என்பதால் நகராட்சி அதிகாரிகள் அதை அகற்றியுள்ளனர். கொடிக் கம்பத்தை மீண்டும் நடவேண்டும் என்று பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தியதாக கூறப்பட்டிருந்தது.

விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்தது குருநானக் ஜெயந்தியையொட்டி (நவம்பர் 30, 2020) என்று பி.பி.சி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவிப்பதற்கு முன்பே இந்த புகைப்படத்தை செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த புகைப்படம் உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டதும் இல்லை. இதன் அடிப்படையில், கனடா பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து கனரா வங்கி முன்பு பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்த புகைப்படம் 2020 ஆகஸ்ட் மாதம் ஊட்டியில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கனரா வங்கி முன்பு போராட்டம் நடத்திய பா.ஜ.க என்று பகிரப்படும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False