FACT CHECK: தாயை சந்திக்க கேமிராமேனுடன் சென்றாரா மோடி?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

கேமிரா மேனுடன் தாயை மோடி சந்தித்தார் என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண… Facebook I Archive

பிரதமர் மோடி தன்னுடைய தாயை சந்திக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தில் வீடியோ கேமராமேன் ஒருவர் அதை படம் பிடிப்பது போல உள்ளது.

நிலைத் தகவலில், “கேமராக்கள் இல்லாமல் தனது தாயைக் கூட சந்திக்கும் வழக்கம் இல்லாதவருக்கு – கோடான கோடி ஏழை தாய்மார்கள் சிந்தும் ரத்தக் கண்ணீர் பற்றி தெரிய வாய்ப்பே இல்லையே. ..?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை R R Raja என்பவர் 2020 அக்டோபர் 6ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடியின் புகைப்பட ஆர்வம் பற்றிய கருத்துக்குள் நாம் செல்லவில்லை. தாயிடம் ஆசி பெறும் இந்த காட்சியையே ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். எனவே, அவர் தன்னுடைய தாயை சந்திக்கும் போது கேமரா மேன்களை அழைத்துச் சென்றாரா, இல்லையா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.

வீடியோகிராஃபர் இருக்கும் காட்சி போட்டோஷாப் செய்யப்பட்டது போல உள்ளது. எனவே, இந்த புகைப்படம் உண்மையா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பிரதமர் மோடி தன்னுடைய தாயிடம் ஆசி பெறும் படம் 2016ம் ஆண்டு அவருடைய பிறந்த நாளின் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அந்த படத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது போன்று கேமரா மேன் இல்லை. 

thehindubusinessline.com I Archive 1 I rstv.nic.in I Archive 2

கேமரா மேன் புகைப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். அப்போது, அந்த படத்தை பல ஊடகங்கள், விளம்பர பக்கங்களில் பயன்படுத்தி வந்திருப்பதைக் காண முடிந்தது. நீண்ட தேடலுக்குப் பிறகு அது istockphoto.com உள்ளிட்ட பல புகைப்பட விற்பனை தளங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

istockphoto.com I Archive 1 I photodune.net I Archve 2

2016ம் ஆண்டு பிரதமர் மோடி தன்னுடைய தாயாரிடம் ஆசி பெற்ற படத்தையும், இணையதளங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கேமராமேன் படத்தையும் இணைத்து போட்டோஷாப் மூலம் படம் உருவாக்கப்பட்டு இருப்பது உறுதியாகிறது. 

பிரதமர் மோடி தன்னுடைய தாயை சந்திக்கச் செல்லும் போது கூட புகைப்பட கலைஞர்கள், வீடியோகிராபரை அழைத்துச் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான அசல் புகைப்படங்கள் பல இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதை பகிராமல், ஸ்டாக் இமேஜ் படத்தை எடுத்து மோடியின் பழைய படத்துடன் சேர்த்து பகிர்ந்துள்ளனர். 

நம்முடைய ஆய்வில், இரண்டு நிகழ்வுகளின் அசல் புகைப்படங்களும் கிடைத்துள்ளன. மோடி தன்னுடைய தாயை சந்தித்த படத்தில் வீடியோ கிராபர் புகைப்படம் போட்டோ எடிட் முறையில் சேர்க்கப்பட்டது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்த படம் எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தாயை சந்திக்க கேமிராமேனுடன் சென்றாரா மோடி?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply