
கோவா கடற்கரையில் பசு மாட்டை விரட்டிய வெளிநாட்டுப் பெண்ணை சங் பரிவார் அமைப்பினர் தாக்கினர் என ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கடற்கரையில் இருவர் தாக்கிக் கொள்கின்றனர். அதில் ஒருவர் அயல் நாட்டினர் போல உள்ளார். மற்றொருவர் இந்தியர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால், வெளிநாட்டைச் சார்ந்த நபர் ஒருவர் இந்தியரை தாக்குகிறார். இதைத் தொடர்ந்து இந்தியருக்கு ஆதரவாக வேறு சிலர் ஓடி வருகின்றனர். கடைசியில் இரண்டு தரப்பினரும் அங்கிருந்து செல்கின்றனர்.
நிலைத் தகவலில், “கோவாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மீது இந்துத்துவா சங்பரிவார்கள் சரமாரியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த பெண்ணின் பொருட்களின் மீது உபத்திரம் செய்ய வந்த ஒரு பசு மாட்டை விரட்டியடிக்க முற்பட்டதால், அந்த வெளிநாட்டு பெண்ணின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இறுதியில் வெளிநாட்டினர்கள் அனைவர்களும் தாக்கப்பட்டார்கள். இந்தக் காணொளி காட்சிகள் வெளிநாடுகளில் வைரலாகியதை தொடர்ந்து, உலக சுற்றுலாத் தளத்தின் பட்டியலிலிருந்து கோவா நீக்கப்படும் நிலமைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் முன்பில் மனிதர்களுக்கு ஒன்றும் விலையில்லாத, முட்டாள்களின் நாடாக இந்தியா உள்ளது என்றும். முட்டாள்களின் மத்தியில் வாழும் நாட்டினர்களாக சில சமூகம் இங்கே வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் விமர்சனம் வெளிநாடுகளில் எழுந்துள்ளது மிகக் குறிப்பிடத்தக்கது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை எம் டி என் டூர்ஸ் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கடற்கரையில் இரு தரப்பினருக்குச் சண்டை நடந்ததை எதன் அடிப்படையில் இந்துத்துவா அமைப்பினர் நடத்திய தாக்குதல் என்று குறிப்பிடுகின்றனர் என்று தெரியவில்லை. வெளிநாட்டினரைத் தாக்கியவர்கள் காவி நிற ஆடை, துண்டு என இந்துத்துவ அமைப்பினர் அணியும் எந்த ஆடையையும் அணிந்திருக்கவில்லை. எனவே, இது தொடர்பாக தேடினோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2016ம் ஆண்டு இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், “கோவா கடற்கரையில் மது போதையில் இந்தியர்களுடன் சண்டையிட்ட வெளிநாட்டு பெண்” என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் கூகுளில் தேடினோம். அப்போது ஏபிபி என்ற ஊடகம் 2017ம் ஆண்டு வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: YouTube I abplive.com I Archive
அதில் பசு காவலர்கள் வெளிநாட்டுப் பெண்ணை தாக்கினர் என்று சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்தோம். அப்போது, இந்த வீடியோ 2012ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், கோவா கடற்கரையில் உள்ள உணவகத்தின் உரிமையாளருக்கும் வெளிநாட்டினருக்கும் இடையே மோதல் என்று குறிப்பிட்டு இந்த வீடியோ 2012ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடற்கரையில் உணவகம் வைத்திருப்பவர்கள் நாற்காலி, மேசைகளை வைத்திருப்பார்கள். அந்த உணவகங்களில் உணவுப் பொருட்களை வாங்குபவர்கள் அந்த நாற்காலிகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், உணவு வாங்காமல், பணம் கொடுக்காமல் இந்த மேசை, நாற்காலிகளை வெளிநாட்டினர் பயன்படுத்தியுள்ளனர். இது பற்றிக் கேட்ட போது வெளிநாட்டினருக்கும் கடை உரிமையாளருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டினரைத் தாக்கியது பசு காவலர்கள் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தனர். 2012ம் ஆண்டில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ அகற்றப்பட்டிருப்பது தெரிந்தது.
இதற்கிடையே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் இது தொடர்பான கட்டுரை வெளியாகி இருந்தது. அதில், டிவி5 நியூஸ் என்ற தெலுங்கு ஊடகம் 2017ம் ஆண்டு இந்த வீடியோ தொடர்பாக செய்தி வெளியிட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். அந்த வீடியோவை பார்த்தோம். அதில், இந்த வீடியோ உணவக உரிமையாளருக்கும் வெளிநாட்டினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என்று குறிப்பிட்டிருந்தனர்.
2012ல் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்போது, வெளிநாட்டினர் மீது பசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். பசு காவலர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டிருக்கும். ஆனால், இது சாதாரண உணவக சண்டை என்பதால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதன் அடிப்படையில் கோவாவில் பசு மாட்டை விரட்டினார்கள் என்பதற்காக வெளிநாட்டினர் மீது இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கோவாவில் கடற்கரை உணவக உரிமையாளர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இடையே நடந்த மோதல் வீடியோவுக்கு மத சாயம் பூசி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கோவாவில் பசுவை விரட்டிய வெளிநாட்டுப் பெண்ணை சங் பரிவார் அமைப்பினர் தாக்கினரா?
Fact Check By: Chendur PandianResult: False
