குஜராத்தில் வாக்கு கேட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியினரை எருமை முட்டியதா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

குஜராத்தில் வாக்கு கேட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மீது எருமை மாடுகள் முட்டியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

எருமை மாடுகள் கூட்டமாக இருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவற்றின் முன்னாள் காங்கிரஸ் கொடியுடன் மூன்று பேர் நிற்கின்றனர். திடீரென்று எருமை மாடு ஒன்று வேகமாக ஓடிவந்து முட்ட முயற்சிக்கிறது. நிலைத் தகவலில், “காங்கிரஸ் நிர்வாகிகள் குஜராத்தில் ஓட்டு கேட்க சென்றபோது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Senthil Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 டிசம்பர் 1ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இந்த வீடியோவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், குஜராத்தில் வாக்கு கேட்டு சென்ற காங்கிரஸ் கட்சியினரை எருமை மாடு முட்டியது என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், வீடியோ உண்மையானது போல தெரியவில்லை. மூன்று பேரின் முதுகின் மீது கொடி வைக்கப்பட்டது போல உள்ளது. அவர்கள் ஓடும் போது கொடி தனியாக செல்கிறது. எனவே, இது எடிட் செய்யப்பட்டது என்பது தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல மாதங்களாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அந்த வீடியோக்களில் காங்கிரஸ் கட்சியின் கொடியும் இல்லை. 

Archive

ShareChat-ல் இந்த வீடியோ 11 மாதங்களுக்கு முன்பு அதாவது 2022 ஜனவரி 19ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில் பஞ்சாபி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த வீடியோவில் காங்கிரஸ் கட்சியின் கொடி இல்லை. சில நாட்களுக்கு முன்பு linkedin.com-ல் ஒருவர் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். அதிலும் கூட காங்கிரஸ் கட்சியின் கொடியில்லை. 

ஏப்ரல் மாதம் இந்த வீடியோவை பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூப் சேனல் ஒன்று பதிவேற்றம் செய்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் நமக்குக் கிடைக்கவில்லை. வீடியோவில் உள்ளவர்களைப் பார்க்கும் போது பாகிஸ்தானில் உள்ளவர்கள் போல ஆடை அணிந்திருந்தனர். எனவே, இது பாகிஸ்தானைச் சார்ந்த வீடியோவாக இருக்கலாம். ஆனால் நம்மால் அதை உறுதி செய்ய முடியவில்லை.

குஜராத் சட்டமன்ற தேர்தல் 2022 டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டது. முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. 2ம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால், இந்த வீடியோ 2022 ஜனவரி மாதம் சமூக ஊடகங்களில் வெளியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்த வீடியோவில் காங்கிரஸ் கட்சியின் கொடி இல்லை. கொடி எடிட் செய்து வைக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் குஜராத்தில் வாக்கு கேட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியினரை எருமை மாடு முட்டியது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பல மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வைரல் ஆன வீடியோவை எடுத்து குஜராத் சட்டமன்ற தேர்தலில் வாக்கு கேட்டு சென்ற காங்கிரஸ் கட்சியினரை எருமை மாடு முட்டியது என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குஜராத்தில் வாக்கு கேட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியினரை எருமை முட்டியதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False