தனியார் கோதுமை மாவு பாக்கெட்டை எச்சில் துப்பிய கோதுமை மாவு என்றும் அதை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது பற்றி பார்ப்போம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஆஷிர்வாத் கோதுமை மாவு பாக்கெட்டில் ஹலால் முத்திரை இருப்பது வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ஆசிர்வாத் ஆட்டா கலால் முத்திரை போட்டு இருக்கு... இன்று முதல் எச்சில் துப்பிய இந்த மைதா மாவை வாங்குவதை நிறுத்திவிடுகிறேன்... ஆசிர்வாத் ஆட்டாவை ஹிந்துக்கள் புறக்கணிப்போம்... ஜெய்ஸ்ரீராம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட நிறுவனம் பிடிக்கவில்லை என்றால் அந்த நிறுவனம் தயாரிக்கும் பொருளை மதத்துடன் இணைத்து பதிவிட்டு அந்த பொருளை புறக்கணிக்கும்படி சமூக ஊடகங்களில் பதிவிடும் கெட்ட பழக்கம் இங்கு அதிக அளவில் உள்ளது. ஆஷிர்வாத் கோதுமை மாவில் ஹலால் முத்திரை இருப்பதால் அது எச்சில் துப்பிய கோதுமை மாவு என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆஷிர்வாத் கோதுமை பாக்கெட்டில் ஹலால் முத்திரை உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.

நம் ஊரில் ஆன்லைனில் விற்பனையாகும் ஆஷிர்வாத் கோதுமை பாக்கெட்களை பார்த்தோம். எதிலும் ஹலால் முத்திரை இல்லை. எனவே, போலியாக ஹலால் முத்திரையை எடிட் செய்து வைத்திருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கூகுளில் ஆஷிர்வாத் கோதுமை, ஹலால் என சில அடிப்படை வார்த்தைகளை டைப் செய்து தேடினோம்.

அப்போது, ஆஷிர்வாத் தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டிருப்பது தெரிந்தது. கோதுமை மாவில் ஹலால் முத்திரை என்று சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய போது அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர்கள் பதிவிட்டிருந்தனர்.

அதில், "இந்தியாவில் ஹலால் முத்திரையுடன் ஆஷிர்வாத் கோதுமை மாவு பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இது தொடர்பாக விளக்கம் அளிக்க விரும்புகிறோம். இந்த பாக்கெட் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவதற்காகத் தயாரிக்கப்பட்டதாகும், இது இந்தியாவுக்குள் விற்பனை செய்யப்படுவது இல்லை. அதுவும் இது மிகப் பழைய ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்பட்ட பாக்கெட் ஆகும்.

குறிப்பிட்ட நாடு, பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றால் சில விஷயங்கள் அவசியமாகும். இப்படி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் பின்பற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப எங்கள் நிறுவனமும் இப்படி செய்கிறது.

ஹலால் முத்திரையுடன் கூடிய கோதுமை மாவை ஆஷிர்வாத் நிறுவனம் விற்பனை செய்கிறது என்று இது போன்ற தவறான தகவல்களை பரப்புவது யாருக்கும் பலன்தராது. இது போன்ற தவறான தகவல், வதந்தியைப் பரப்பாமல் இருக்க கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archive

இந்தியாவில் விற்பனையாகும் அந்த நிறுவனத்தின் கோதுமை மாவு பாக்கெட்டில் ஹலால் முத்திரை இல்லை. வெளிநாட்டில் விற்பனையாகும் அந்த நிறுவனத்தின் கோதுமை மாவு பாக்கெட்டில் ஹலால் முத்திரை உள்ளதா என்று அறிய ஆய்வை தொடர்ந்தோம். அமேசான் நிறுவனத்தின் துபாய் இணையதளத்தில் ஆஷிர்வாத் கோதுமை மாவு பாக்கெட்டை பார்த்தோம். அதில் ஹலால் முத்திரை இருந்தது.

இதன் மூலம் வெளிநாட்டில் விற்பனையாகும் ஆஷிர்வாத் நிறுவனத்தின் கோதுமை மாவு பாக்கெட்டை வைத்து தவறாக வதந்தி பரப்பியிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஆஷிர்வாத் கோதுமை மாவு பாக்கெட்டில் ஹலால் முத்திரை உள்ளதால் புறக்கணிக்க வேண்டும் என்று பரவிய பதிவில் உண்மையில்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கோதுமை மாவு பாக்கெட்டில் ஹலால்: இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பரவிய விஷமம்!

Written By: Chendur Pandian

Result: False