குஜராத்தில் பா.ஜ.க பெண் எம்.பி கழிவுநீர் கால்வாய் திட்டத்தை திறந்து வைத்த போது, அந்த கால்வாய் தளம் இடிந்து விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

பெண் ஒருவர் பொது மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று சரிந்து கீழே வாய்க்கால் ஒன்றுக்குள் விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் "குஜராத் BJP. MP பூனம் பென், தனது தொகுதியில் 10 கோடி செலவில் போடப்பட்ட 10 மீட்டர் சாக்கடை திட்டத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த போது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை சுயமரியாதை சூரியன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 பிப்ரவரி 22 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் பெண் கலெக்டர் ஒருவர் சாக்கடையில் விழுந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அந்த பெண் மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லை, பா.ஜ.க-வின் எம்.பி பூனம் மாடம் என்று முன்பு உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தி செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில், பூனம் மாடமின் பெயரை பூனம் பென் என்று மாற்றி, ரூ.10 கோடி செலவில் 10 மீட்டர் தூரத்துக்கு சாக்கடை அமைக்கப்பட்டதாகவும் அதை பூனம் பென் திறந்து வைத்த போது அது இடிந்து விழுந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் இருவர் இல்லை, ஏராளமானவர்கள் இதை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். மிகவும் வைரலாக அது பகிரப்பட்டு வருகிறது. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

சாக்கடை அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவது பெரிய விஷயம் இல்லை. ஆனால், 10 மீட்டர் தூரத்துக்கு சாக்கடை அமைக்க 10 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தது அதிர்ச்சி ரகமாக இருந்தது. அப்படி என்றால் ஒரு மீட்டர் சாக்கடை அமைக்க ஒரு கோடி ரூபாய் செலவாகுமா என்ற கேள்வியும் எழுந்தது. குஜராத் பெண் எம்.பி, கால்வாயில் விழுந்தார் என்பது உள்ளிட்ட கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடினோம்.

அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive 1 I thehindu.com I Archive 2 I thenewsminute.com I Archive 3

இது தொடர்பான வீடியோ, செய்திகள் நமக்கு கிடைத்தன. தி இந்து நாளிதழ், நியூஸ் மினிட் உள்ளிட்ட ஊடகங்களில் தொடர்பாக 2016 மே 16 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில், "ஜாம் நகர் எம்.பி பூனம் மாடம் எட்டு அடி ஆழம் கொண்ட கால்வாயில் விழுந்ததில் காயம் அடைந்தார். ஜாம் நகரின் குடிசைவாழ் மக்கள் வாழும் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொது மக்களிடம் பேசுவதற்காக எம்.பி பூனம் வந்தார். ஒரு ஸ்லாப் மீது நின்றபடி மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்லாப் உடைந்ததில் பூனம் எட்டு அடி ஆழம் கொண்ட கால்வாயில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

தி இந்து மட்டுமின்றி எல்லா ஊடகங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் போது அங்கு வந்தார் என்றே குறிப்பிட்டிருந்தனர். ரூ.10 கோடியில் 10 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட சாக்கடையைத் திறக்க அவர் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

வீடியோவை பார்க்கும்போது, அந்த இடத்தில் கட்டிட இடிபாடுகளைக் காண முடிகிறது. எனவே, புதிதாக கட்டப்பட்ட சாக்கடை ஸ்லாப் உடைந்து பா.ஜ.க பெண் எம்.பி உள்ளே விழுந்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குஜராத்தில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட சாக்கடை திறப்பு விழாவின்போது சாக்கடை உடைந்து பா.ஜ.க பெண் எம்.பி உள்ளே விழுந்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சாக்கடைத் திட்டத்தை தொடங்கி வைத்தபோது உடைந்து விழுந்த பா.ஜ.க பெண் எம்.பி; உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian

Result: False