
பா.ஜ.க, பா.ம.க, எடப்பாடி பழனிசாமி கூட்டணி என்பது தலித் மற்றும் இஸ்லாமிய விரோத கூட்டணி என்று சசிகலா விமர்சித்ததாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சசிகலா பெயரில் உள்ள ட்வீட் கணக்கில் இருந்து வெளியான ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “BJP + PMK + EPS என்பது தலித் – இஸ்லாமிய விரோதக் கூட்டணி!” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “#எடப்பாடி கோஷ்டி மட்டுமல்ல #அமீத்ஷா அன்கோவினரும் கலக்கத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை இந்த ஒரு ட்வீட் சொல்லிவிடுகிறது !” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Hassan Waha என்பவர் 2021 மார்ச் 1 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன் என்று சசிகலா ட்வீட் செய்ததாக சில தினங்களுக்கு முன்பு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. வி.கே.சசிகலா என்ற பெயரில் அந்த ட்வீட் இருந்ததால் பலரும் இதை ஷேர் செய்தனர். இது தொடர்பாக சசிகலா தரப்பினரைத் தொடர்புகொண்டு விசாரித்த போது, “சின்னம்மாவுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக ஊடகங்களில் எந்த கணக்கும் இல்லை. அவர்கள் தொடங்கினால் அது பற்றித் தெரிவிக்கிறோம்” என்று நம்மிடம் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் அந்த ட்வீட் போலியானது என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். அப்படி இருக்கும் போது புதிதாக சசிகலா நடராஜன் என்ற பெயரில் ட்வீட் பதிவு வைரலாகி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த ட்வீட்டை உண்மையில் யாராவது வெளியிட்டுள்ளார்களா, அல்லது போலியாக உருவாக்கியுள்ளார்களா என்று அறிய, ட்விட்டரில் தேடினோம். அப்போது சசிகலா நடராஜன் என்று ஒரு ட்விட்டர் கணக்கு இருப்பது தெரிந்தது. அதைப் பார்த்தபோது, ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வேன் என்று ட்வீட் வெளியிட்ட அதே அக்கவுண்ட் என்பது தெரிந்தது. வி.கே.சசிகலா என்று இருந்ததை சசிகலா நடராஜன் என்று தற்போது மாற்றியிருப்பதும் தெரிந்தது.
அதில் பிப்ரவரி 28, 2021 அன்று “BJP + PMK + EPS என்பது தலித் – இஸ்லாமிய விரோதக் கூட்டணி!” என்று ட்வீட் வெளியாகி இருப்பதும் தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Twitter I Archive
ஏற்கனவே இந்த ட்விட்டர் பக்கம் போலியானது என்று தெரிவித்திருந்தோம். சுய விவர குறிப்பில் சில மாறுபாடு செய்யப்பட்டு இருந்தது. நையாண்டிக்கானது, ஏ2 (இரண்டாம் குற்றவாளி), தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்பு மாஃபியா, ஜெயில் பறவை, ஸ்கேமர் என்று இருந்தது எல்லாம் நீக்கப்பட்டிருந்தது. கவர் போட்டோவில் இருந்த ஏ2 (இரண்டாம் குற்றவாளி) என்ற படமும் அகற்றப்பட்டிருந்தது. இரண்டுமே @SasikalaOffl என்ற ஐடி-யை கொண்டிருந்தன.

நம்முடைய ஆய்வில், இந்த ட்விட்டர் கணக்கு சசிகலாவுக்கு உரியது இல்லை, சசிகலா பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், “அ.தி.மு.க கூட்டணி தலித், இஸ்லாமிய விரோத கூட்டணி” என்று சசிகலா கூறியதாகப் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை சசிகலா விமர்சித்ததாக பகிரப்பட்டு வரும் ட்வீட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அதிமுக கூட்டணியை தலித், இஸ்லாமிய விரோத கூட்டணி என்று சசிகலா விமர்சித்தாரா?- போலி ட்வீட்டால் சர்ச்சை
Fact Check By: Chendur PandianResult: False
